குடிநீர் வினியோக ஒப்பந்தம் தனியாருக்கு வழங்கியதை கண்டித்து மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முற்றுகை, 794 பேர் கைது

குடிநீர் வினியோக ஒப்பந்தத்தை தனியாருக்கு வழங்கியதை கண்டித்து மாநகராட்சி மண்டல அலுவலகங்களை முற்றுகையிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 794 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

Update: 2018-09-19 00:00 GMT

கோவை,

கோவை மாநகராட்சி குடிநீர் வினியோகத்தை சூயஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கியதை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சார்பில், மாநகராட்சியின் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய 4 மண்டல அலுவலகங்களை முற்றுகையிட்டும், சாலை மறியல் போராட்டமும் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு., விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், அனைத்து இந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாற்று திறனாளிகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து இருந்தன.

இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்தநிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் போலீசாரின் தடையை மீறி 4 மண்டல அலுவலகங்களிலும் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கோவை வடக்கு மண்டல அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். போராட்டம் குறித்து அவர் கூறியதாவது:–

கோவை மாநகராட்சி குடிநீர் வினியோக உரிமை சூயஸ் நிறுவனத்துக்கு விடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 800 பக்க ஒப்பந்த நகல் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் சில மாற்றத்துடன் குடிநீர் கட்டணத்தை சூயஸ் நிறுவனம் நிர்ணயித்து கொள்ளலாம் என கூறப்பட்டு உள்ளது. தேவை ஏற்பட்டால் குடிநீர் கட்டணத்தை உயர்த்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி குடிநீர் வினியோக உரிமையை சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் 1,200 பொது குடிநீர் குழாய்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும்.

மேலும் குடிநீர் கட்டணமும் உயரும் அபாயம் உருவாகும். எனவே இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முற்றுகை மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.பி. பி.ஆர். நடராஜன், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மற்றும் 126 பெண்கள் உள்பட 310 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் சிங்காநல்லூரில் உள்ள கிழக்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.

இதில் 320 பேர் கைதுசெய்யப்பட்டனர். ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மேற்கு மண்டல அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாதர் சங்க மாநில துணை செயலாளர் ராதிகா ஆகியோர் தலைமையிலும், குனியமுத்தூர் தெற்கு மண்டல அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்க பொறுப்பாளர் கருப்பையா தலைமையிலும் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியவாறு மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

கிழக்கு மண்டலம் உள்பட 4 மண்டல அலுவலகங்களிலும் முற்றுகை மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்திய பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 178 பெண்கள் உள்பட 794 பேர் கைதுசெய்யப்பட்டு, அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்