பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஜோடியை நடுரோட்டில் தாக்கிய உறவினர்கள்
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஜோடியை நடுரோட்டில் உறவினர்கள் தாக்கினர். சினிமா காட்சியை போல் நடந்த சம்பவத்தால் கடலூரில் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கடலூர்,
புதுச்சேரி கல்மேடுபட்டு நேதாஜிதெருவை சேர்ந்தவர் பூபாலன். இவருடைய மகன் தேவநாதன் (வயது 22). வில்லியனூர் பெரியப்பட்டு மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியநாதன் மகள் எஸ்தர் (20). பட்டதாரி பெண். இவர்கள் 2 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்தனர்.
இவர்களது காதல் விவகாரம் தெரிந்ததும் எஸ்தரின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையும் மீறி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே எஸ்தரை காணவில்லை என்று அவரது தந்தை பாக்கியநாதன் வில்லியனூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எஸ்தரை தேடி வந்தனர். அதுமட்டுமின்றி அவரை பெற்றோர் மற்றும் உறவினர்களும் பல இடங்களில் தேடி வந்தனர்.
இதற்கிடையில் தங்களது திருமணத்தை பதிவு செய்வதற்காக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு தேவநாதனும், எஸ்தரும் நேற்று வந்தனர்.
இது பற்றி அறிந்ததும் எஸ்தரின் அண்ணன் மற்றும் உறவினர்கள், கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வந்தனர். அந்த சமயத்தில் தங்களது திருமணத்தை பதிவு செய்து விட்டு தேவநாதனும், எஸ்தரும் வெளியே வந்து, அங்கு தயார் நிலையில் நின்றிருந்த காரில் ஏறி புறப்பட்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த எஸ்தரின் அண்ணனும், உறவினர்களும் ஒரு ஆட்டோவில் ஏறி, காதல் ஜோடி சென்ற காரை துரத்தி சென்றனர். 4 முனை சந்திப்பு சாலையான வேதவிநாயகர் கோவில் அருகில் காதல் ஜோடியினர் சென்ற காரை அவர்கள் வழிமறித்தனர்.
பின்னர் காரில் இருந்த அவர்களை வெளியே இழுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் வந்த கார் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர். நடுரோட்டில் பட்டப்பகலில் சினிமா காட்சியை போல் நடந்த இந்த சம்பவத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பவத்தால் வண்டிப்பாளையம் சாலை, லாரன்ஸ் சாலை, தேரடி தெருவில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி அறிந்ததும் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காதல் ஜோடியை மீட்டனர். பின்னர் போக்குவரத்தை சரி செய்து, அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
ஏற்கனவே எஸ்தர் மாயமானதாக வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவரை அந்த போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கூறிய தகவலின்படி, வில்லியனூர் போலீசார் கடலூருக்கு விரைந்து வந்தனர். அவர்களிடம் எஸ்தர் ஒப்படைக்கப்பட்டார். அப்போது எஸ்தர், தன்னுடன் காதல் கணவர் தேவநாதனும் வர அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கு வில்லியனூர் போலீசார் சம்மதம் தெரிவித்து, காதல் ஜோடியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர். நடுரோட்டில் காதல் ஜோடியை உறவினர்கள் தாக்கிய சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.