தொழிலதிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு 4 பேருக்கு வலைவீச்சு
தஞ்சையில் தொழிலதிபரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
தஞ்சாவூர்,
தஞ்சை அருளானந்த நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் இளங்கோவன்(வயது 65). தொழில் அதிபரான இவர், கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராதிகா ராணி. இவர், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு டாக்டராக உள்ளார்.
தினமும் காலை நேரத்தில் இளங்கோவன், தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள தனக்கு சொந்தமான இரு சக்கர வாகன விற்பனை மையத்திற்கு வந்து ஷோரூமை பார்த்து விட்டு செல்வார்.
அந்த ஷோரூம் பின்புறம் போர்வெல் போடும் பணி கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. வழக்கம்போல் நேற்று காலை இளங்கோவன் ஷோரூமுக்கு சென்றார். அங்கு போர்வெல் போடும் பணியை பார்த்து விட்டு வீட்டுக்கு செல்வதற்காக காரில் ஏற வந்தார்.
அப்போது அந்த பகுதியில் நின்ற 4 பேர் கொண்ட கும்பல் அங்கு ஓடி வந்து இளங்கோவனை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கினர். அரிவாளாலும் வெட்டினர்.
உடனே இளங்கோவன் சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஷோரூமில் இருந்த பணியாளர்கள் மற்றும் அங்கு நின்ற பொதுமக்கள் அங்கு ஓடிவந்தனர். இதைப்பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது. காயம் அடைந்த இளங்கோவனை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தஞ்சை மருத்துவக்கல்லுாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இளங்கோவனை இரும்பு கம்பியால் தாக்கிய, அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, ராஜகோபால், பழனிச்சாமி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், ஷோரூமில் உள்ள கேமிரா மற்றும் அப்பகுதியில் உள்ள கேமிராவில் பதிவானவற்றை சுமார் 1 மணி நேரம் ஆய்வு செய்தனர்.
இதில் இளங்கோவனை கொலை செய்ய முயற்சி செய்த கும்பல் திருச்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. தஞ்சை திலகர் திடல் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியை ஏலம் எடுத்தது தொடர்பாக இளங்கோவனை கொலை செய்ய முயற்சி நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இளங்கோவன் தாக்கப்பட்டதை அறிந்ததும், தஞ்சையை அடுத்த வயலூரில் உள்ள அவருடைய கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்லூரி முன்பு திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள், இளங்கோவனை தாக்கிய மர்ம கும்பலை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.