சர்ச்சையை ஏற்படுத்திய எச்.ராஜா விவகாரம்: வழக்கில் சிக்கிய 5 பேர் முன்ஜாமீன் கேட்டு மனு

விநாயகர் சிலை ஊர்வலத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய எச்.ராஜா விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த 5 பேர் முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் நேற்று மனுதாக்கல் செய்தனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Update: 2018-09-18 23:00 GMT

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே கே.பள்ளிவாசல் மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, அந்த ஊரில் உள்ள மகாமுத்து மாரியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிலையை கரைப்பதற்காக கடந்த 15–ந் தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டது.

இந்த ஊர்வலத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பங்கேற்றார். அப்போது, அந்த சிலையை ஊருக்குள் எடுத்துச்செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து, ஐகோர்ட்டையும், போலீசாரையும் எச்.ராஜா விமர்சனம் செய்ததாக, சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து எச்.ராஜா உள்ளிட்ட பலர் மீது திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள மெய்யபுரத்தை சேர்ந்த வைத்தியலிங்கம், சொக்கலிங்கம், பெருமாள், ராதாகிருஷ்ணன், அய்யனார்புரத்தை சேர்ந்த ரத்தினம் ஆகிய 5 பேரும் தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

அதில், கடந்த 15–ந்தேதி விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக திருமயம் போலீசார் பதிவு செய்த வழக்கில் கூறப்பட்டுள்ள சம்பவத்துக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அடையாளம் தெரிந்த, பெயர் தெரியாத பலர் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் எங்களையும், எங்களது கிராமத்தினரையும் போலீசார் கைது செய்ய முயற்சி செய்கிறார்கள். மெய்யபுரம் கிராம மக்கள் சட்டத்தை மதித்து நடப்போம். எனவே எங்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்’ என்று கூறியுள்ளனர்.

இந்த மனு மதுரை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மேலும் செய்திகள்