அண்ணாவுக்கு பெருமை சேர்த்த இயக்கம் அ.தி.மு.க. அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேச்சு
அண்ணாவுக்கு பெருமை சேர்த்த இயக்கம் அ.தி.மு.க.தான் என்று காங்கேயத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் பேசினார்.
காங்கேயம்,
காங்கேயம் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் பஸ் நிலையம் அருகே உள்ள சீரணி அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கட்சியின் நகர செயலாளர் வெங்கு என்கிற மணிமாறன் தலைமை தாங்கினார். ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் கே.கே.பழனிச்சாமி வரவேற்று பேசினார். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுச்சாமி, செல்வக்குமார சின்னையன் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என்.எஸ்.என்.நடராஜ், செல்விமுருகேசன் மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள் அம்புஜம், அன்பழகன் ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பிரதமருக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே அண்ணாவுக்கு பெருமை சேர்த்த இயக்கம் அ.தி.மு.க. தான். அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஒரு கோடியே 75 லட்சம் பேருக்கு விலையில்லா மிக்சி, கிரைண்டர் கொடுத்து சரித்திர சாதனை படைத்தார். கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினருக்கும் இன்று கால்நடை பராமரிப்புத்துறை மூலம் 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு ரூ.300 கோடி செலவில் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் கிழக்கு மாவட்டங்களுக்கு வழங்கப்பட்டு வந்த கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் தற்போது மேற்கு மாவட்டங்களை சேர்ந்த ஏழை, எளிய மக்களுக்கும் வழங்க வேண்டும் என்று சொல்லி இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் மூலம் கிராமப்புற ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சுமார் ரூ.50 கோடி செலவில் 77 ஆயிரம் பயனாளிகளுக்கு 50 நாட்டுக்கோழிகள் வழங்கும் மகத்தான திட்டத்தை முதல்–அமைச்சர் விரைவில் தொடங்கிவைக்க உள்ளார்.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.