கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தாய் -மகள் தற்கொலை

பெண்ணுக்கு திருமணம் ஆகாததால் விரக்தி அடைந்த தாய், மகளுடன் கோபி அருகே செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-09-18 22:30 GMT
கடத்தூர்,

கோபி அருகே உள்ள குப்பன்துறையில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. தற்போது வாய்க்காலில் அதிக அளவில் தண்ணீர் சென்றுகொண்டு இருக்கிறது. இந்தநிலையில் நேற்று காலை வாய்க்கால் தண்ணீரில் தலைகுப்புற கவிழ்ந்த நிலையில் 2 பெண் பிணங்கள் மிதந்தன.

அந்த வழியாக சென்றவர்கள் உடனே கடத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காந்திமதி போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 2 உடல்களையும் வாய்க்காலில் இருந்து மீட்டார். உடல்கள் அழுகிய நிலையில் இருந்தன. அதன்பின்னர் 2 உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணமாக மிதந்தவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எப்படி இறந்தார்கள்? என்று விசாரணை நடத்தினார்கள்.

அதில் பிணமாக மிதந்தவர்கள் கோவை கணபதியை சேர்ந்த சாமிநாதன் என்பவரின் மனைவி ராதாமணி (47), மகள் தீபா (26) என்று தெரியவந்தது.

மேலும், தீபாவுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போய் உள்ளது. தன்னுடைய பெண்ணுக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லையே என்ற கவலையில் இருந்த ராதாமணி விரக்தி அடைந்து மகளுடன் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அதற்காக நேற்று முன்தினம் ராதாமணி மகள் தீபாவை அழைத்துக்கொண்டு கணவரிடம் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் செல்வதாக கூறிவிட்டு வந்திருக்கிறார்.

அதன்பின்னர் தாயும், மகளும் கோபி அருகே குப்பன்துறையில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

மேலும் செய்திகள்