“தி.மு.க.வை குறை சொல்வதற்கு யாருக்கும் அருகதை கிடையாது”

தி.மு.க.வை குறை சொல்வதற்கு யாருக்கும் அருகதை கிடையாது என்று தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கூறினார்.;

Update: 2018-09-18 21:30 GMT
தூத்துக்குடி, 


தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. அரசின் ஊழல் முறைகேடுகள் குறித்து மக்களுக்கு விளக்கும் வகையில் புதுக்கோட்டையில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணி துணை செயலாளர் எஸ்.ஜோயல், மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

அ.தி.மு.க. அரசு தில்லுமுல்லு செய்து ஆட்சியாளர்கள், பதவியில் இருக்கும் வரை சுருட்ட வேண்டும் என்ற வகையில் அனைத்து துறைகளிலும் ஒட்டுமொத்தமாக ஊழல் செய்து வருகின்றனர். 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்த பிறகு இந்த ஆட்சி முடிவுக்கு வந்து விடும். முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி ஆகிய 4 பேர் மீதும் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்து உள்ளார். இதனால் 4 பேரும் ஜெயிலுக்கு செல்வது உறுதி.

விவசாய பணிகளுக்காக கரம்பைமண் அள்ளிய பகுதியில் தூர்வாரியதாக கணக்கு காண்பித்து ரூ.3 ஆயிரத்து 500 கோடி கொள்ளையடித்து உள்ளனர்.

திருச்செந்தூர் கோவில் பிரகாரம் இடிந்து உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலில் தீப்பிடித்து உள்ளது. திருச்செந்தூர் கோவில் பிரகார மண்டபம் அமைக்க முன்வந்தவர்களிடமும் கமிஷன் கேட்டதால் அந்த பணியும் நடக்கவில்லை. அங்கு உள்ள கடை வியாபாரிகளும் திணறி வருகின்றனர். தி.மு.க.வை குறை சொல்வதற்கு யாருக்கும் அருகதை கிடையாது. ஊழல் இல்லாத ஆட்சி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையும். விரைவில் அ.தி.மு.க. ஆட்சி வீழும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர் நவீன்குமார், சண்முகையா, ஆறுமுகநேரி நகர பொறுப்பாளர் கல்யாணசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்