மோட்டார் சைக்கிள்–மொபட் மோதல்; விவசாயி பலி

திட்டக்குடியில் மோட்டார் சைக்கிள்–மொபட் மோதிய விபத்தில் விவசாயி இறந்தார். இதில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர்.

Update: 2018-09-18 21:30 GMT

திட்டக்குடி, 

திட்டக்குடி கூத்தப்பன்குடிகாட்டை சேர்ந்தவர் திருஞானம்(வயது 55). விவசாயி. சம்பவத்தன்று இவர், தனது மொபட்டில் கூத்தப்பன்குடிகாட்டில் இருந்து கடைக்கு புறப்பட்டார். இதேபோல் திட்டக்குடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் பயிர் அறுவடை பரிசோதனை அலுவலராக பணியாற்றி வரும் நிதிநத்தம் கிராமத்தை சேர்ந்த பால்ராஜ்(52), அதே அலுவலகத்தில் துணை வேளாண்மை அலுவலராக பணியாற்றி வரும் இளங்கோவன் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். 

கூத்தப்பன்குடிகாட்டில் மோட்டார் சைக்கிளும், மொபட்டும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த 3 பேரையும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருஞானம் மட்டும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி திருஞானம் நேற்று பரிதாபமாக இறந்தார். 

மற்ற 2 பேரும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்