கலெக்டரை சந்திக்க அடுப்புக்கரியுடன் விவசாயிகள் வந்ததால் பரபரப்பு

மின்தட்டுப்பாடு நிலவுவதாக கூறி கலெக்டரை சந்திக்க அடுப்புக்கரியுடன் விவசாயிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-17 21:30 GMT
தஞ்சாவூர்,


தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் நிர்வாகிகள் சதாசிவம், கண்ணப்பா, தாமோதரன், சாமிநாதன், ஜெயபால் ஆகியோர் அடுப்புக்கரியுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

பின்னர் அவர்கள் கலெக்டர் அண்ணாதுரையை சந்தித்து அடுப்புக்கரியை கொடுப்பதற்காக கூட்ட அரங்கிற்கு செல்ல முயன்றனர். ஆனால் அடுப்புக்கரியை கொண்டு செல்ல அனுமதி கிடையாது என்று தடுத்து நிறுத்தி விட்டனர்.

இது குறித்து மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் நிருபர்களிடம் கூறும்போது, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டு 2 மாதங்கள் ஆகியும் இதுவரை கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை. இந்தநிலையில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் மின்தட்டுப்பாடு நிலவுகிறது. எப்போது மின்சாரம் வருகிறது, போகிறது என்றே தெரியவில்லை.

இதனால் சம்பா சாகுபடி செய்ய முடியுமா? என்ற அச்சம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. முதல்-அமைச்சருக்கு கலெக்டர் மூலம் அடுப்புக்கரியை அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக வந்தோம். ஆனால் போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடன் கொடுக்க அதிகாரிகள் தயாராக இருந்தும், ஆளும்கட்சியினர் கொடுக்கவிடாமல் தடுக்கின்றனர் என்றார். 

மேலும் செய்திகள்