தண்டவாளத்துக்கு அடியில் ‘திடீர்’ பள்ளம் சிவமொக்கா-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது

தரிகெரே அருகே தண்டவாளத்துக்கு அடியில் ‘திடீர்’ பள்ளத்தால் பரபரப்பு ஏற்பட்டது. டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டதால் சிவமொக்கா-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது.

Update: 2018-09-17 23:17 GMT
சிக்கமகளூரு,

சிவமொக்காவில் இருந்து பெங்களூருவுக்கு சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே வழியாக தினமும் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவமொக்காவில் இருந்து பெங்களூருவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரெயில் நேற்று முன்தினம் மதியம் சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா ஹலியூர் அருகே வந்து கொண்டிருந்தது.

அந்த சமயத்தில், ஹலியூர் பகுதியில் ரெயில்வே தண்டவாளத்துக்கு அடியில், திடீரென்று பள்ளம் ஏற்பட்டது. இதனால் தண்டவாளத்துக்கும், தரைக்கும் இடையே சிறிய இடைவெளி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப்பகுதி மக்கள் உடனடியாக தரிகெரே ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் அதற்குள் அந்த ரெயில் தரிகெரேவை தாண்டி ஹலியூர் அருகே வந்தது. இதுபற்றி உடனடியாக ரெயில் என்ஜின் டிரைவருக்கு ரெயில் நிலைய அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த என்ஜின் டிரைவர், சாமர்த்தியமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார். ஆனாலும், தண்டவாளத்துக்கு அடியில் பள்ளம் ஏற்பட்ட பகுதியை தாண்டி தான் ரெயில் நின்றது. ரெயில் மெதுவாக சென்றதால் எந்த அசம்பாவித சம்பவமும் நடக்கவில்லை.

சரியான நேரத்தில் என்ஜின் டிரைவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார். இல்லாவிட்டால் பெரிய விபத்து ஏற்பட்டிருக்கும். அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் சிவமொக்கா-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் தப்பியது.

இதையடுத்து ெரயில்வே ஊழியர்கள் ஹலியூர் பகுதிக்கு விரைந்து வந்தனர். இவர்கள், தண்டவாளத்துக்கு அடியில் ஏற்பட்ட பள்ளத்தை சரி செய்தனர். அங்கு மண் மற்றும் ஜல்லி கற்களை போட்டு பள்ளத்தை மூடினர். பின்னர் தண்டவாளத்துக்கும், தரைக்கும் இடையே உள்ள இடைவெளி சரி செய்யப்பட்டது. அதன்பின்னர் சுமார் 2 மணி நேரம் தாமதமாக சிவமொக்கா-பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்