விநாயகர் படங்களுடன் ஊர்வலமாக வந்த விவசாயிகள் - குறைதீர்வு நாளில் பரபரப்பு

குறைதீர்வு நாளில் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு விநாயகர் படங்களுடன் விவசாயிகள் ஊர்வலமாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-17 22:45 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். இதில் வீட்டு மனைப்பட்டா, ரேஷன் கார்டு, முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, வேலை வாய்ப்பு என பல்வேறு கோரிக்கைகள் குறித்து சுமார் 400-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் கந்தசாமி, அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். கூட்டத்தையொட்டி கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீசார் கூட்டத்திற்கு வந்த மக்களை தீவிர சோதனைக்கு பின்னரே அலுவலக வளாகத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.

கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து விநாயகர் படங்களுடன் ஊர்வலமாக கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்தனர். பின்னர் அவர்கள் விநாயகர் படத்திற்கு மணிலா செடியை மாலையாக அணிவித்து கற்பூரம் ஏற்றி பூஜை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அவர்கள், மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும் கூட்டரங்கிற்கு சென்று கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி மணிலா கடந்த ஆனி மாதம் 1-ந் தேதி முதல் விதைப்பு செய்யப்பட்டது. ஆடி மாதத்தில் மழை பெய்யாததால் பூ எடுக்காமல் சில செடிகள் கருகியது. எஞ்சிய செடிகள் தற்போது இளம் தளிராக உள்ளது. இதனால் மகசூல் இழப்பு ஏற்பட்டு உள்ளது. மகசூல் இழப்பை கணக்கிடக்கோரி கடந்த ஜூலை மாதம் 30-ந் தேதி நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மனு அளிக்கப்பட்டது. இதுவரை அதற்கு பதில் இல்லை.

மேலும் 100 நாள் வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் மூலமாக கடந்த ஆண்டு 6 நாட்கள் மட்டும் வேலை அளித்த நிலையில் தேசிய விருது திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வழங்கியது எந்த வகையில் பொருந்தும். நடப்பு ஆண்டில் 10 நாட்கள் மட்டுமே வேலை வழங்கி பொருளாதார இழப்பில் உள்ளது. எனவே, மணிலா விநாயகர் மற்றும் ஏரி வேலை செய்யும் விநாயகரும் மன உளச்சலில் உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு காப்பீடு கிடைக்குமா?, 100 நாள் வேலை தொடர்ச்சியாக வழங்கப்படுமா? என்று 21-ந் தேதிக்குள் பதில் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காவிட்டால் மறுநாள் 22-ந் தேதி காலை 11 மணி அளவில் செய்யாறு அணைக்கட்டு பாலம் மேலிருந்து விநாயகர் குதிக்கும் (விநாயகர் படத்தை கீழே போடும்) போராட்டம் நடத்த உள்ளோம். இந்த போராட்டத்திற்கு வேளாண்மைத்துறை அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை வேடியப்பனூரை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், ஆன்மிக நகரமான திருவண்ணாமலை கிரிவலப்பாதை அருகே உள்ள வேடியப்பனூர் மெயின் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். வெளி நாட்டவர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் உள்ளது. இங்கு தொடர்ந்து அதிக சாலை விபத்துகள் ஏற்படுகிறது. தெருக்களில் மின் விளக்குகள் இல்லை. இதை பயன்படுத்தி இரவு நேரங்களில் வழிப்பறி சம்பவங்கள் அதிக அளவில் நடக்கிறது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சாலை மற்றும் மின்விளக்கு அமைத்து தர வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தண்டராம்பட்டு தாலுகா புதூர்செக்கடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில், நாங்கள் இந்த பகுதியில் சுமார் 15 ஆண்டிற்கு மேலாக வசித்து வருகிறோம். எங்களுக்கு என்று சொந்தமாக நிலம் மற்றும் வீடு இல்லை. நாங்கள் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். பிழைப்பிற்காக அடிக்கடி வெளியூர் சென்று வருகிறோம். அந்தோணியார் நகர் பகுதியில் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தில் எங்களுக்கு வீட்டுமனை ஒதுக்கி இலவச பட்டா வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்