14 ஆண்டுகள் முடிவடைந்தும் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் - அன்பழகன் எம்.எல்.ஏ வலியுறுத்தல்
14 ஆண்டுகள் முடிவடைந்தும் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அ.தி.மு.க. சட்டமன்ற தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
புதுச்சேரி அரசின் அலட்சிய போக்கினால் ஆயுள் தண்டனை கைதிகள் 14 ஆண்டுகள் முடிவடைந்தும் சிறைச்சாலையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பலர் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ளனர். சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு மனிதாபிமான முறையில் திருந்தி வாழ வாய்ப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
அந்த அடிப்படையில் தமிழகத்தின் முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் ஆயுள் தண்டனை கைதிகளின் நன்னடத்தையை கணக்கிட்டு ஆண்டுதோறும் பல ஆயிரம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். தற்போது கூட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 10 ஆண்டுகள் தண்டனை முடிந்த பல நூறு கைதிகளை தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விடுதலை செய்துள்ளார்.
புதுவை காலாப்பட்டு சிறையில் 50க்கும் மேற்பட்ட ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர். இதில் 14 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் 10–க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேலாக 15–க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் சிறையில் உள்ளனர். மகாத்மா காந்தியின் 150–வது ஆண்டு பிறந்த நாள் விழா அடுத்த மாதம்(அக்டோபர்) 2–ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் 25–க்கும் மேற்பட்ட கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்.
சிறை கைதிகளை விடுவிக்க முதல்–அமைச்சர் உயர்மட்ட குழுவினை கூட்ட வேண்டும். அதில் நல்ல முடிவினை எடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க வேண்டும். மற்ற குற்றசெயல் புரிந்த குற்றவாளிகளுக்கு 3–ல் 2 பங்கு தண்டனை காலத்தை சிறையில் கழித்தவர்களையும் மனிதாபிமான முறையில் உடனே விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த அதில் கூறப்பட்டுள்ளது.