மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
சீரமைப்பு பணி இன்று முதல் தொடங்குகிறது. இதனால் மணிமுத்தாறு அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
அம்பை,
நெல்லை மாவட்டத்தில் உள்ள மனிமுத்தாறு அருவி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சுற்றுலா பயணிகளின் மனதை கவர்ந்த அருவியாகும். இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து மகிழ்ச்சியாக குளித்து செல்வர். இதனால் இங்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இதற்கிடையே ஒகி புயலால் ஏற்பட்ட வெள்ள பெருக்கினால் மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கும் பகுதியில் உள்ள தரை மற்றும் தடுப்பு கம்பிகள் கடுமையாக சேதமடைந்தன. சேதமடைந்த அருவியின் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்லாமல் இருக்க தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. இதனால் ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் குளித்து வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டது. இதை தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவி பகுதியை சீரமைக்க கோரிக்கை வைத்தனர். வனத்துறையினர் அருவி பகுதி முற்றிலும் சீரமைக்க முடிவு செய்தனர். அதன்படி சீரமைப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
இதனால் இன்று முதல் சீரமைப்பு பணிகள் முடியும் வரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மணிமுத்தாறு வழியாக மாஞ்சோலை முதல் குதிரைவட்டி வரை இயக்கப்படும் அரசு பஸ் செல்ல தடைவிதிக்கப்படவில்லை. இதேபோல் தனியார் சுற்றுலா வாகனங்கள் மாஞ்சோலை வரை செல்ல முன் அனுமதி பெற்று செல்லலாம் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.