சிமெண்டு சிலாப் உடைந்து கிணற்றுக்குள் விழுந்த 3 பெண்கள் பலி 5 பேர் உயிருடன் மீட்பு

கல்பாக்கம் அருகே சூரியபிள்ளையார்குப்பம் கிராமத்தில் சிமெண்டு சிலாப் உடைந்து கிணற்றுக்குள் விழுந்த 8 பேரில் 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். 3 பெண்கள் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-09-17 23:15 GMT
கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம் அடுத்த லத்தூர் ஒன்றியம் கல்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட சூரிய பிள்ளையார்குப்பம் கிராம மக்களுக்கு ஊராட்சி சார்பில் மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து குழாய்கள் மூலம் வீடுகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்ததால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. இதனால் மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற முடியாததால் வீடுகளுக்கு குடிநீர் வரவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த கிராமத்தைச் சேர்ந்த சங்கரின் மனைவி சசி (வயது 35), செல்லமுத்துவின் மனைவி மங்கை (45), ஏழுமலையின் மனைவி கமலா (28), ரவியின் மனைவி மல்லிகா (35), ராமச்சந்திரனின் மனைவி சிவகாமி (35), சிட்டிபாபுவின் மனைவி அம்சா (32), காளிதாஸ் என்பவருடைய மகள் நீலாவதி (14) மற்றும் நாகப்பன் (50) ஆகிய 8 பேரும் நேற்று மாலை அந்த கிராமத்தில் உள்ள பொது கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றனர்.

அந்த கிணறு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது என கூறப்படுகிறது. அந்த கிணற்றின் மேல் பகுதியில் சிமெண்டு சிலாப்புகளால் மூடப்பட்டு, நடுவில் 2 இடங்களில் தண்ணீர் இறைப்பதற்காகவும், கிணற்றை தூர்வாரவும் இடைவெளி விடப்பட்டு இருந்தது.

இவர்கள் 8 பேரும் கிணற்றின் நடுபகுதியில் சிமெண்டு சிலாப்பில் நின்றபடி தாங்கள் கொண்டு வந்த குடங்களில் கிணற்றில் இருந்த தண்ணீரை இறைத்து ஊற்றியபடி இருந்தனர்.

அந்த சிமெண்டு சிலாப் சேதமடைந்து இருந்ததாலும், நேற்று முன்தினம் மழையால் ஈரப்பதமாக இருந்ததாலும் பாரம் தாங்காமல் திடீரென சிமெண்டு சிலாப்பின் நடுப்பகுதி உடைந்து, சுமார் 60 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டது.

சிமெண்டு சிலாப்பில் நின்றபடி தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த 8 பேரும் கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் தத்தளித்தனர். கிணற்றுக்குள் இருந்து அவர்களின் அலறல் சத்தம்கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், கிணற்றில் உயிருக்கு போராடியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் செய்யூர் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஏணி மற்றும் கயிறுகளின் உதவியுடன் கிணற்றுக்குள் இறங்கினர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் உயிருக்கு போராடிய நாகப்பன், மல்லிகா, சிவகாமி, அம்சா மற்றும் நீலாவதி ஆகிய 5 பேரையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

கிணற்றுக்குள் விழுந்ததில் படுகாயம் அடைந்த அவர்கள் 5 பேரும் உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கிணற்றில் மூழ்கிய சசி, மங்கை, கமலா ஆகிய 3 பெண்களும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். இரவு 7 மணி வரை தேடியும் அவர்களின் உடல்களை மீட்க முடியவில்லை. அதிக ஆழம் கொண்ட அந்த கிணற்றில் சேறும், சகதியுமாக இருப்பதால் அவர்களின் உடல்கள் சேற்றில் சிக்கி இருக்கலாம் என தெரிகிறது.

அதன்பிறகு ராட்சத ஏணி வரவழைக்கப்பட்டு, அதன் உதவியுடன் கிணற்றில் மூழ்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு, 3 பெண்களின் உடல்களும் அடுத்தடுத்து மீட்கப்பட்டன.

சம்பவ இடத்துக்கு மதுராந்தகம் ஆர்.டி.ஓ. மாலதி, செய்யூர் தாசில்தார் ரமா, லத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு மற்றும் செய்யூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் உள்ளிட்டோர் வந்து மீட்பு பணியை துரிதப்படுத்தினர்.

மேலும் செய்திகள்