நெல்லை மாவட்டத்தில் இ-சேவை மையங்களை கண்டறிய புதிய செயலி

நெல்லை மாவட்டத்தில் இ-சேவை மையங்களை கண்டறிய புதிய செயலியை கலெக்டர் ஷில்பா அறிமுகம் செய்து வைத்தார்.;

Update: 2018-09-17 22:00 GMT
நெல்லை, 


நெல்லை மாவட்டத்தில் வருவாய்த்துறை மூலம் வழங்கப்படுகின்ற சாதி சான்றிதழ்கள், வருமான சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும், பட்டா மாற்றம் உள்ளிட்டவைகளும் திருமண உதவி திட்டங்கள், சமூக நலத்துறை, தீயணைப்புத்துறை வழங்குகின்ற சான்றிதழ்களும் தற்போது இ-சேவை மையங்களின் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு, அதிகாரிகள் விசாரணை நடத்தி வழங்கப்படுகிறது.
மேலும் பட்டா, ஆதார்கார்டு, ஸ்மார்ட்கார்டு ஆகியவைகளும் இதன் மூலம் எடுத்துக்கொள்ளலாம். இதற்காக மாவட்டத்தில் மொத்தம் 383 இ-சேவை மையங்கள் உள்ளன.

இந்த இ-சேவை மையங்கள் எந்த இடத்தில் உள்ளது என்பதை அறிந்து கொள்ள பொதுமக்கள் தாங்கள் வைத்து உள்ள ஆன்ட்ராய்டு செல்போன்களில் கூகுல் பிளேஸ்டோரில் சென்று ‘சிஎஸ்சி’ எனப்படும் செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும்.

அதில் ‘சிஎஸ்சி’ நெல்லை என டைப் செய்தால் அருகில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்குள் உள்ள இ-சேவை மையமும், அதன் தொடர்பு எண்ணும் தெரியும். அதன் மூலம் பொதுமக்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையத்தை தெரிந்து கொள்ளலாம். இந்த புதிய செயலி தமிழகத்திலேயே நெல்லையில் தான் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதை நேற்று கலெக்டர் ஷில்பா, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நெல்லை மாவட்டத்தில் உள்ள 383 இ-சேவை மையங்களின் முகவரியை தெரிந்து கொள்வதற்காக ‘சிஎஸ்சி‘ நெல்லை என்ற செயலியை தமிழகத்திலேயே நெல்லை மாவட்டத்தில் தான் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆன்ட்ராய்டு செல்போன்களில் கூகுல் பிளேஸ்டோரில் சென்று ‘சிஎஸ்சி‘ எனப்படும் செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும்.

அதில் ‘சிஎஸ்சி‘ நெல்லை என டைப் செய்தால் அருகில் 1 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 15 கிலோ மீட்டர், 20 கிலோ மீட்டர், 30 கிலோ மீட்டர் ஆகிய 6 வகையான சுற்றளவில் உள்ள இ-சேவை மையங்களின் இருப்பிடத்தையும், தொலைபேசி எண்ணையும் தங்கள் செல்போனில் பார்த்துக்கொள்ளலாம்.

அந்த தொலைபேசி எண்ணின் மீது அழுத்தினால் நேரடியாக அந்த மையத்தின் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.
இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், உதவி கலெக்டர் மைதிலி, தேசிய தகவல் மையத்தின் முதுநிலை இயக்குனர் தேவராஜன், இயக்குனர் ஆறுமுகநயினார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்