சிவகங்கை அருகே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த பட்டதாரி வாலிபர், போலீஸ் விசாரணை
சிவகங்கை அருகே ரெயில் தண்டவாளத்தில் பட்டதாரி வாலிபர் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்தாரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த சூரக்குளம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் பிரதீப் (வயது 24). இவர் கல்லூரி முடித்துவிட்டு வேலையில்லாமல் இருந்து வந்தார். இதனால் அவர் கட்டிட வேலைக்கு சென்று வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து வெளியே சென்ற பிரதீப், இரவு வெகு நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர்.
இதற்கிடையில் மாயமான பிரதீப் நேற்று அதிகாலை அவரது வீட்டின் அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தில் உடல் துண்டான நிலையில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் பிரதீப் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
கொலையா?இதனையடுத்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் குறித்தும், அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக உடலை மீட்க போலீசார் வர தாமதமானதால் உடல் ரெயில் தண்டவாளத்தை விட்டு அகற்றப்படாமல் 3 மணி நேரத்திற்கு மேலாக கிடந்தது. இதனால் அந்த தண்டவாளம் வழியாக சென்ற ரெயில்கள் உடல் மீது ஏறி சென்றது பரிதாபமாக இருந்ததாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
=====
படம் உள்ளது.