பராமரிப்பு பணியால் மும்பையில் ரெயில் சேவை பாதிப்பு விநாயகரை தரிசிக்க முடியாமல் பொதுமக்கள் பரிதவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக மும்பையில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால், விநாயகரை தரிசனம் செய்ய முடியாமல் பொதுமக்கள் பரிதவித்தனர்.

Update: 2018-09-16 23:00 GMT
மும்பை, 

பராமரிப்பு பணி காரணமாக மும்பையில் ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால், விநாயகரை தரிசனம் செய்ய முடியாமல் பொதுமக்கள் பரிதவித்தனர்.

பராமரிப்பு பணிகள்

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் நேற்று பகல் முல்லுண்டு- மாட்டுங்கா இடையே ஸ்லோ வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடந்தது. இதன் காரணமாக ஸ்லோ ரெயில்கள் அனைத்தும் முல்லுண்டு, மாட்டுங்கா இடையே விரைவு வழித்தடத்தில் இயக்கப்பட்டன. இதில், பிளாட்பார வசதியில்லாத காரணத்தால் ரெயில்கள் நாகுர், காஞ்சூர்மார்க், வித்யாவிகார் ஆகிய ரெயில்நிலையங்களில் நிற்கவில்லை. மேலும் பராமரிப்பு பணி காரணமாக ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன. சில ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருந்தன.

இதேபோல துறைமுக வழித்தடத்தில் நடந்த பராமரிப்பு காரணமாக பன்வெல்- சி.எஸ்.எம்.டி. இடையே இரு வழிப்பாதைகளிலும் மின்சார ரெயில்கள் இயக்கப்படவில்லை. மேற்கு ரெயில்வே வழித்தடத்திலும் போரிவிலி- பயந்தர் இடையே பராமரிப்பு பணிகள் நடந்தன.

பொதுமக்கள் அவதி

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது 3 வழித்தடங்களிலும் ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதன் காரணமாக மத்திய ரெயில்வே வழித்தடத்தில் இயக்கப்பட்ட ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. பன்வெல்- சி.எஸ்.எம்.டி. இடையே ரெயில்சேவை ரத்து செய்யப்பட்டதால் நவிமும்பை உள்பட பல்வேறு பகுதி மக்கள் மும்பையில் உள்ள மண்டல்களுக்கு வந்து விநாயகரை தரிசனம் செய்ய முடியாமல் பரிதவித்தனர்.

இது குறித்து பயணி ஒருவர் கூறுகையில், ‘விநாயகர் சதுர்த்தி போன்ற திருவிழா சமயங்களில் ரெயில்வே நிர்வாகம் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்’ என்றாா்.

மேலும் செய்திகள்