கள்ளநோட்டு கும்பலுக்கு வெளிநாட்டு சதிகாரர்களுடன் தொடர்பா? கைதான 5 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை

மதுரை அருகே வீட்டில் அச்சடித்த ரூ.6¾ லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் நாகர்கோவிலை சேர்ந்தவர் உள்பட 5 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

Update: 2018-09-16 23:15 GMT

மதுரை,

மதுரை கருப்பாயூரணியை அடுத்த விளத்தூரில் ஒரு வீட்டில் கள்ள நோட்டு அச்சடிப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் தனிப்படை சப்–இன்ஸ்பெக்டர் ஸ்டீபன்ராஜ் தலைமையிலான போலீசார் அந்த வீட்டிற்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது ஒரு அறையில் கட்டுக்கட்டாக 2,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. மற்றொரு அறையில் கம்ப்யூட்டர் உபகரணங்கள், நோட்டு அச்சடிக்கும் எந்திரம் உள்பட பல்வேறு பொருட்கள் இருந்தன. அவை அனைத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

அங்கிருந்த நாகர்கோவிலை சேர்ந்த தங்கராஜ்(வயது 66) உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் பல லட்சம் ரூபாய் கள்ளநோட்டுகளை அச்சடித்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கு மாவட்ட குற்றப்புலனாய்வு பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து கைதானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவற்றை குற்றப்புலனாய்வு போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது நைஜீரியா நாட்டு கரன்சி, அரபு மொழியில் எழுதப்பட்டிருந்த காகிதம் போன்றவையும் இருந்தன. இதையடுத்து கைதானவர்களுக்கு சர்வதேச கள்ளநோட்டு கும்பலுடன் தொடர்பு இருந்திருக்கலாமா என்ற சந்தேகம் போலீசாரிடையே எழுந்துள்ளது.

கைப்பற்றப்பட்ட வெளிநாட்டு கரன்சி அசல் நோட்டுகளா, போலியா என்பதை அறிய பரிசோதனைக்கு அனுப்பவும் போலீசார் முடிவு செய்தனர். கைதான தங்கராஜ் கொடுத்த தகவலின்பேரில் திருச்செந்தூர் பகுதிக்கு அவரை நேற்று போலீசார் அழைத்து சென்றனர். அங்கு கள்ளநோட்டு அச்சடிக்க பயன்படுத்திய எந்திரம், தாள்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இவர்களுக்கு பின்புலமாக யார் உள்ளனர்? இவர்கள் தமிழகம் முழுவதும் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளார்களா? என்று போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்