தொழிற்சாலையை காலி செய்த போது மோதல்; 4 பேர் காயம்

வில்லியனூர் அருகே பிளாஸ்டிக் தொழிற்சாலையை காலி செய்தபோது ஏற்பட்ட தகராறில் 4 பேர் காயம் அடைந்தனர். மேலும் கிரேன் மற்றும் மினிவேன் ஆகியவற்றின் டயர்களும் சேதப்படுத்தப்பட்டன.

Update: 2018-09-16 22:15 GMT
வில்லியனூர்,

வில்லியனூரை அடுத்த ஆரியப்பாளையம் இந்திராநகரை சேர்ந்தவர் கார்த்திக். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரும் கூட்டாக பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வந்தனர். தனிக்குப்பம்-மடுகரை ரோட்டில் வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் இந்த தொழிற்சாலையை நடத்தினர்.

இந்தநிலையில் தற்போது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட் களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலையை தொடர்ந்து நடத்துவதில் சிரமம் ஏற்படும் என்று கருதிய அவர்கள் 2 பேரும் தொழிற்சாலையை மூட முடிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தொழிற்சாலையில் உள்ள எந்திரம் மற்றும் பொருட்களை எடுத்துச் செல்ல கிரேன் எந்திரம் மற்றும் மினிவேன் ஆகியவற்றை கொண்டு வந்தனர். மேலும் அத்தாட்சிக்காக கேமராமேன் புஷ்பநாதன் என்பவரையும் அழைத்து வந்தனர். அப்போது தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தின் உரிமையாளர் வெங்கடேசன், அவருடைய அண்ணன் துளசிநாதன் மற்றும் வெங்கடேசனின் நண்பர்கள் மணிகண்டன், நாகராஜன் ஆகியோர் அங்கு வந்து தொழிற்சாலையை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். ஒப்பந்த காலம் முடியும்வரை தொழிற்சாலையை நடத்த வேண்டும் என்று கூறினார்.

அதில் இரு தரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறின்போது வெங்கடேசன் தரப்பினர் ஆத்திரம் அடைந்து தொழிற்சாலையை காலி செய்வதற்காக அழைத்து வரப்பட்ட மினிவேன் மற்றும் கிரேன் வாகனங்களின் டயர் களை சேதம் செய்தனர். படம் பிடித்த கேமராவையும் பறித்து உடைத்ததாகவும், கார்த்திக், சிவா ஆகியோரையும், கேமராமேன் புஷ்பநாதனையும், மினிவேன் டிரைவர் ஆகிய 4 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் காயம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து கார்த்திக், கரிக்கலாம்பாக்கம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன் உள்பட 4 பேரை வலை வீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்