சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களின் வைகை நதி பழைய ஆயக்கட்டு விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், விவசாயிகள் மனு

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் வைகை நதி பழைய ஆயக்கட்டு விவசாயத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று முதல்–அமைச்சருக்கு விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

Update: 2018-09-16 22:15 GMT

சிவகங்கை,

சிவகங்கை மாவட்ட வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் ஆதிமூலம், ஒருங்கிணைப்பாளர் கணநாதன், தலைவர் உலகநாதன், செயலாளர்கள் விஜயகிருஷ்ணன், மாணிக்கவாசகம், பொருளாளர் மலைச்சாமி மற்றும் விவசாயிகள் முதல்–அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–

நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ததன் காரணமாக முல்லை பெரியாறு அணை நிரம்பியது. மேலும் வைகை அணையும் முழு கொள்ளளவை எட்டியது. வைகை நதியில் கடந்த 20 ஆண்டுகளாக போதிய நீர் ஓடாமல் ஆறு முழுவதும் வறண்டு போய்விட்டது. பழைய ஆயக்கட்டு பகுதி பாசனமின்றி விவசாயம் செய்யமுடியாமல் கடும் பாதிப்புள்ளாகியுள்ளது. குடிநீருக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. நிலத்தடி நீரும் அதல பாதாளத்தில் சென்றுவிட்டது. இந்தநிலையில் தற்போது முல்லை பெரியாறு மற்றும் வைகை அணைகளில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.

முல்லை பெரியாறு அணை 142 அடி நிரம்பிய நிலையிலும், பெரியாற்றில் ஏறபட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் வைகை நீர்பிடிப்பு பகுதியில் ஏற்பட்ட வெள்ள உபரிநீர் வைகை நதியில் திறந்துவிடப்பட்டது. பெரியாறு அணையில் இருந்து மாற்றப்பட்ட வெள்ள உபரிநீரையும், சுருளியாறு, வைரவனாறு, மூல வைகையில் ஏற்பட்ட வெள்ள உபரிநீரையும், வைகை நதி பங்கீட்டு நீரையும் சேர்த்து கணக்கிட்டு வைகை நதி பழைய ஆயக்கட்டுகள் 1–வது, 2–வது, 3–வது ஆகியவற்றின் மூலம் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசன கண்மாய்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பிரிவு 2–ன் படியும், 15–ன்படியும் டெல்டா வைகை நதி பாசன பகுதிகளான மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தண்ணீர் திறந்துவிடவும், கண்மாய்களில் தேக்கி வைக்கவும் தண்ணீர் திறக்க வேண்டும். வைகை நதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடவில்லை என்றால் வருகிற வடகிழக்கு பருவமழை காலத்தில் வைகையிலும், முல்லை பெரியாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே 2 அணைகளிலும் முழு கொள்ளவு தண்ணீர் தேக்கப்பட்டுள்ள நிலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கடும் பாதிப்பு ஏற்படும். எனவே அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், வைகை பூர்வீக பாசன பகுதியின் தேவையை போக்கவும் மக்களின் நலன்கருதி அணையில் அதிகப்படியான நீரை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தென்மேற்கு பருவமழையால் கிடைத்த நீரை சரியான முறையில் பயன்படுத்தவும், அடுத்த மாதம் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழையால் ஏற்பட போகும் வெள்ள அபாயத்தை தவிர்க்கவும், வைகை நதி பழைய ஆயக்கட்டுப் பகுதியின் தாகத்தை போக்கவும் தண்ணீர் திறந்து, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒருபோக சாகுபடி விவசாய பணிகள் தொடங்க உதவ வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்