மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

விடையூர் ஊராட்சியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-09-16 22:45 GMT
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது விடையூர் ஊராட்சி. இங்குள்ள விடையூர் காலனி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக மந்தவெளி அம்மன் கோவில் அருகே 60 ஆயிரம் லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டது.

அதன் மூலமாக அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டும் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.

குறிப்பாக அந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் 4 தூண்களில் 2 தூண்கள் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்தும், மேல்பகுதியிலும் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து இரும்பு கம்பிகள் அபாயகரமாக வெளியே தெரிகிறது.

இந்த நீர்த்தேக்க தொட்டியானது எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இருப்பினும் இதனை அதிகாரிகள் சீரமைக்காமல் தொடர்ந்து அந்த மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீரை சேமித்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனு அளித்தும் இது நாள் வரையிலும் அந்த மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே விடையூர் காலனி பகுதியில் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து அபாயகரமான நிலையில் உள்ள இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அதிகாரிகள் இனிமேலும் காலதாமதம் செய்யாமல் விரைந்து சீரமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்