நெல்லை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் விஜர்சனம்

நெல்லை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டன.

Update: 2018-09-16 21:30 GMT
விக்கிரமசிங்கபுரம்,

நெல்லை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை கிழக்கு மாவட்டம் இந்து முன்னணி சார்பில் விக்கிரமசிங்கபுரத்தில் பல்வேறு தெருக்களில் 18 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. இந்த சிலைகளுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

நேற்று இந்த சிலைகள் சிவந்திபுரத்திற்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. மேலும், அம்பை பகுதியில் இருந்து 13 சிலைகளும், கல்லிடைக்குறிச்சியிலிருந்து 9 சிலைகளும், சேரன்மாதேவியில் இருந்து 5 சிலைகளும் சிவந்திபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

அங்கிருந்து நேற்று சிலைகள் ஊர்வலம் தொடக்க நிகழ்ச்சிக்கு சிவந்திபுரம் கஸ்பா நாடார் சமுதாய முன்னாள் தலைவர் மாயாண்டிராஜன் தலைமை தாங்கினார். சிவந்திபுரம் கஸ்பா விஸ்வகர்ம சமுதாய தலைவர் நாராயணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்து முன்னணி கோட்ட செயலாளர் தங்க மனோகர், மாவட்ட செயலாளர் ஜெயபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளர் கோபால், பா.ஜ.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் குட்டி, இந்து முன்னணி அம்பை ஒன்றிய துணைத்தலைவர் மில்லர் ஆகியோர் பேசினர். நகர இந்து முன்னணி துணைத்தலைவர் கல்யாணராமன் நன்றி கூறினார்.

சிலைகள் ஊர்வலம்

சிவந்திபுரத்தில் இருந்து சிலைகள் ஊர்வலத்தை தேவேந்திரகுல சமுதாய தலைவர் பாண்டி தொடங்கி வைத்தார். ஊர்வலம் சிவந்திபுரம், அம்பலவாணபுரம், சாலைத்தெரு, மூன்று லாம்பு, சந்தனமாரியம்மன் கோவில், விக்கிரமசிங்கபுரத்தில் நான்கு ரதவீதிகள், டாணா வழியாக பாபநாசம் சென்றடைந்தது. வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அங்கு சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் ஒவ்வொரு சிலையாக தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு அம்பை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜாகீர்உசேன், மணிமுத்தாறு பட்டாலியன் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேந்திரன் தலைமையில் 7 இன்ஸ்பெக்டர்கள், 17 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 106 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திசையன்விளை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திசையன்விளை, நாங்குநேரி, ராதாபுரம் தாலுகாவில் இந்து முன்னனி சார்பில் வைத்து வழிபாடு நடத்தப்பட்ட சிலைகள் திசையன்விளை போலீஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து சிலைகள் மேள தாளத்துடன் வாகனங்களில் ஊர்வலமாக புறப்பட்டது. ஊர்வலத்திற்கு மாவட்ட பாரதீய ஜனதா துணைத்தலைவர் சாந்திராகவன் தலைமை தாங்கினார். பரமேஸ்வரபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன் ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலை அடைந்தது. அங்கு சிலைகளுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து 123 சிலைகளும் உவரி கடலில் கரைக்கப்பட்டது. இதில் இந்து முன்னனியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

களக்காடு

களக்காடு பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஸ்வ இந்து பரிசத் சார்பில் 32 இடங்களிலும், அகில பாரத இந்து மகாசபா சார்பில் 13 இடங்களிலும், இந்து முன்னனி சார்பில் 1 இடம் என மொத்தம் 46 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. அகில பாரத இந்து மகாசபா சார்பில் சிலைகளின் ஊர்வலம் நேற்று களக்காடு வரதராஜபெருமாள் கோவிலில் இருந்து தொடங்கியது. கணேசன் தலைமை தாங்கினார். முத்தப்பா, ராஜபாண்டியன், முத்துவேல், ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் துரை ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பின்னர் சிலைகள் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டது.

இதேபோன்று விஸ்வ இந்து பரிசத் சார்பில் சிலைகளின் ஊர்வலம் சத்தீயவாகீஸ்வரர் கோவில் முன்பு இருந்து தொடங்கி உவரி கடற்கரையில் விஜர்சனம் செய்யப்பட்டது. இதில் தென்மாநில தலைவர் பெரிகுழைக்காதர், சுப்பையா, கண்ணன் உள்பட நிர்வாகிகள் பலர கலந்து கொண்டனர்.

இதேபோல் பணகுடி பகுதிகளில் இருந்து 14 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக வாகனங்களில் எடுத்து வரப்பட்டு உவரி கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகளை பணகுடி நகர இந்து முன்னணி தலைவர் அய்யப்பன் மற்றும் பக்தர்கள் செய்து இருந்தனர்.

மேலும் செய்திகள்