பெட்ரோல் விலை உயர்வை குறைக்க பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் இல.கணேசன் பேட்டி

பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் என்று இல.கணேசன் கூறினார்.

Update: 2018-09-16 21:15 GMT
திருச்செந்தூர், 

பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் என்று இல.கணேசன் கூறினார்.

பேட்டி

பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் திருச்செந்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ரபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ததில் எந்த முறைகேடும் நிகழவில்லை. பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியும், விஜய் மல்லையாவும் நடந்து சென்றபோதுதான் சந்தித்து பேசினார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் குறைக்க பிரதமர் மோடி நல்ல முடிவை எடுப்பார். பெட்ரோல், டீசல் விலையை சரக்கு, சேவை வரிக்குள் (ஜி.எஸ்.டி.) கொண்டு வர மத்திய அரசு, மாநில அரசுகளுடன் பேசி வருகிறது.

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி அமைத்துதான் பா.ஜ.க. போட்டியிடும். யாருடன் கூட்டணி என்பது இப்போது கூற முடியாது. தி.மு.க. கூட்டணியை பா.ஜ.க. எதிர்பார்க்கவில்லை.

இவ்வாறு இல. கணேசன் கூறினார்.

7 பேர் விடுதலை விவகாரம்

பின்னர் அவர் கோவில்பட்டிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில், முடிவு எடுக்கக்கூடிய பொறுப்பினை நீதிமன்றம் கவர்னருக்கு தந்துள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்ற கால அவகாசம் இல்லை. நீண்ட காலமாக நடைபெற்று வந்த சிக்கலான வழக்கு என்பதால், கவர்னர் முடிவு எடுக்க சில நாட்கள் எடுத்து கொள்ளலாம். செங்கோட்டையில் நடந்த சம்பவத்துக்கு எந்த அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவிக்கவில்லை. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு இல.கணேசன் பேசினார்.

மேலும் செய்திகள்