வாகன சோதனையின்போது போலீசாரின் கருவியை பறித்து சென்ற மாணவர் கைது

போலீஸ் சோதனையின்போது குடிபோதையை கண்டறியும் கருவியை பறித்து சென்ற அண்ணா பல்லைக்கழக மாணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-09-16 22:30 GMT
அடையாறு,

சென்னை அடையாறு, கிரீன்வேஸ் சாலை அருகே நேற்றுமுன்தினம் இரவு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மெரினா நோக்கி வந்த ஒரு சொகுசு காரை நிறுத்திய போலீசார், காரை ஓட்டி வந்த வாலிபரிடம் விசாரித்தனர். அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் மது போதையை கண்டறியும் கருவியை அந்த வாலிபரிடம் கொடுத்து ஊதும்படி கூறினர். ஆனால் அந்த வாலிபர், போலீசாரிடம் இருந்த அந்த கருவியை பறித்துக் கொண்டு காரில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.

உடனடியாக போக்குவரத்து போலீசார், அந்த காரை விரட்டிச் சென்றனர். மேலும் வயர்லஸ் கருவி மூலம் அந்த வழியில் இருந்த போலீசாருக்கும் தகவல் அளித்தனர். ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே அந்த காரை போக்குவரத்து போலீசார் மடக்கிப்பிடித்தனர்.

காரில் இருந்த வாலிபரை பிடித்து அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், வேளச்சேரியை சேர்ந்த பூஷன்(வயது 20) என்பதும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படித்து வருவதும் தெரிந்தது.

அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரிடம் இருந்த போலீசாரின் மது போதையை கண்டறியும் கருவியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்