ஓட்டப்பிடாரம் அருகே வாலிபர் கொலை: மனைவியின் கள்ளக்காதலன் கைது பரபரப்பு வாக்குமூலம்
ஓட்டப்பிடாரம் அருகே வாலிபர் கொலையில் மனைவியின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். அவர் போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் அருகே வாலிபர் கொலையில் மனைவியின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். அவர் போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
வாலிபர் கொலை
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் சுடலைமணி மகன் உதயகுமார் (வயது 29) கோழி வியாபாரி. இவர் அக்கநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் அருகே கோழிக்கடை மற்றும் துரித உணவகமும் நடத்தி வந்தார். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சொக்கநாதபுரத்தை சேர்ந்த மாசாதேவி (25) என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். உதயகுமார் இரவில் கடையின் முன்பு படுத்து தூங்குவது வழக்கம். கடந்த 13-ந் தேதி வழக்கம் போல் கடையின் முன்பு படுத்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது, உதயகுமாரை மர்ம நபர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கள்ளக்காதலன் கைது
இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த மாடசாமி மகன் ரஞ்சித்குமார் (27) என்பவர், உதயகுமாரை வெட்டிக் கொலை செய்து இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனால் தப்பி ஓடிய ரஞ்சித்குமாரை புளியம்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, ரஞ்சித்குமார் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவலை தெரிவித்து உள்ளார்.எனக்கும், உதயகுமாரின் மனைவி மாசாதேவிக்கும் கடந்த 2 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்தது. இதனால் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கள்ளக்காதலை வளர்த்து வந்தோம். இதனை அறிந்த உதயகுமார், 2 பேரையும் கண்டித்தார். இதில் ஆத்திரம் அடைந்த மாசாதேவி மந்திதோப்பில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
அதன் பின்னர், எனக்கும், உதயகுமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. உதயகுமார், என்னை கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதும் எனக்கு தெரியவந்தது. இதனால் நான், எனது நண்பர்களுடன் சேர்ந்து, உதயகுமாரை கொலை செய்ய திட்டம் தீட்டினோம். அதன்படி சம்பவத்தன்று கடை முன்பு படுத்து இருந்த உதயகுமாரை, 2 நண்பர்களுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தோம். இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.