பணகுடி அருகே பரிதாபம் மினி லாரி மீது ஆம்னி பஸ் மோதல்; அண்ணன் - தம்பி பலி

பணகுடி அருகே மினி லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் அண்ணன், தம்பி பலியானார்கள்.

Update: 2018-09-16 22:15 GMT
பணகுடி, 

பணகுடி அருகே மினி லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் அண்ணன், தம்பி பலியானார்கள்.

ஆம்னி பஸ்-மினி லாரி மோதல்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு நேற்று காலை கன்னியாகுமரியை நோக்கி வந்து கொண்டிருந்தது. 10 மணியளவில் பணகுடி அருகே நான்கு வழிச்சாலையில் தண்டையார்குளம் பிரியும் இடத்தில் சென்றபோது, அந்த வழியாக வந்த ஒரு மோட்டார்சைக்கிள் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பஸ்சை லேசாக வலதுபுறம் திருப்பினார்.

இதில் நான்கு வழிச்சாலையின் மத்தியில் உள்ள தடுப்புச்சுவரின் மீது ஏறி எதிர் திசைக்கு ஆம்னி பஸ் சென்றது. அப்போது நாகர்கோவிலில் இருந்து வள்ளியூரை நோக்கி தென்னங்கீற்றுகளை ஏற்றி வந்த மினி லாரி மீது ஆம்னி பஸ் பயங்கரமாக மோதியது.

2 பேர் பலி

இந்த விபத்தில், மினிலாரியின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. அதில் இருந்த 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். இதனை பார்த்த ஆம்னி பஸ் டிரைவர், அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.

இந்த விபத்து காரணமாக, அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ் மற்றும் பணகுடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் போக்குவரத்தை ஒரு வழிப்பாதையாக மாற்றி வாகன நெரிசலை சரிசெய்தனர். மேலும் வள்ளியூர் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். மினி லாரியில் சிக்கியிருந்த 2 பேரின் உடல்களையும் தீயணைப்பு படையினர் மீட்டனர். பின்னர் அவர்களின் உடல்களை பணகுடி போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, பஸ்சுக்கு அடியில் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த மினி லாரி மீட்கப்பட்டது.

தென்னங்கீற்று வியாபாரிகள்

போலீசார் நடத்திய விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழிபுதூரை சேர்ந்த வீரமணி மகன்கள் ராஜேந்திரன் (வயது 46), பாஸ்கர் (40) ஆகியோர் என்பதும், தென்னங்கீற்று வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. பஸ்சில் வந்த யாருக்கும் காயம் எதுவும் இல்லை.

இந்த விபத்து தொடர்பாக, பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய ஆம்னி பஸ் டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்.

இந்த விபத்தால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்