தென்காசியில் 6 கடைகளில் தீ விபத்து போலீசார் தீவிர விசாரணை

தென்காசியில் 6 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2018-09-15 22:30 GMT
தென்காசி, 

தென்காசியில் 6 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

4 கடைகளில் தீ விபத்து 

தென்காசி கீழப்புலியூர் புலிக்குட்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் குமாரசாமி மகன் ரவி. இவர் இந்த பகுதியில் அச்சகம் நடத்தி வருகிறார். இதே பகுதியில் முகம்மது அலி என்பவர் பலசரக்கு மற்றும் ஷாப் பொருட்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். மேலும் இதே பகுதியில் எஸ்.எம்.நாகூர் மீரான் என்பவர் மாவு அரைக்கும் மில்லும், சுடலைமுத்து என்பவர் பூக்கடையும் நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் இந்த 4 கடைகளிலும் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஒரே பகுதியில் 4 கடைகளின் கூரைகளிலும் தீ விபத்து ஏற்பட்டதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தென்காசி போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் தீவிர விசாரணை 

இந்தநிலையில் நேற்று அதிகாலை சுமார் 2 மணிக்கு தென்காசி வாய்க்கால்பாலம் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வரும் ராஜாசிங் என்பவரது பலசரக்கு கடை தீப்பிடித்து எரிந்தது. இதே போல் அதே நேரத்தில் தென்காசி கன்னிமாரம்மன் கோவில் தெருவில் உள்ள ஜீவன்ராம் என்பவருக்கு சொந்தமான பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடையும் தீப்பிடித்து எரிந்தது.

இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தென்காசி தீயணைப்பு படை நிலைய அலுவலர் பாலச்சந்தர் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த சம்பவங்கள் குறித்தும் தென்காசி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்–இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீப்பிடித்து எரிந்த பலசரக்கு கடை உரிமையாளர் ராஜாசிங் தென்காசி நகர பா.ஜ.க முன்னாள் தலைவர் ஆவார். செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் நடந்த கலவரத்தை தொடர்ந்து இந்த தீ விபத்து ஏற்பட்டதால் தென்காசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இரவு, பகலாக தென்காசி பகுதியில் போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்