காஞ்சீபுரத்தில் அண்ணா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மரியாதை

காஞ்சீபுரம் அண்ணா நினைவு இல்லத்தில் அவரது சிலைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Update: 2018-09-15 21:46 GMT
காஞ்சீபுரம், 

அண்ணா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அண்ணா பிறந்த ஊரான காஞ்சீபுரத்தில் அவரது நினைவு இல்லத்திற்கு நேற்று மாலை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அவரை அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் பொன்னையா, காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், சிட்லபாக்கம் ராஜேந்திரன், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி முத்தியால்பேட்டை ஆர்.வி.ரஞ்சித்குமார், முன்னாள் எம்.பி. காஞ்சீ பன்னீர்செல்வம், கவிஞர் கூரம் துரை ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர்.

பின்னர் அண்ணா நினைவு இல்லத்தில் உள்ள அண்ணா சிலைக்கு தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அண்ணாவின் அரிய புகைப்படங்களை பார்வையிட்டார். பிறகு, அண்ணா நினைவு இல்லத்தில் இருந்த வருகை பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார். முன்னதாக அண்ணா நினைவு இல்ல வாயில்படியில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில், கோவிந்தவாடி குருபகவான் கோவில், செங்கல்பட்டு விநாயகர் கோவில் போன்றவற்றில் இருந்து பிரசாதங்களை கோவில் அர்ச்சகர்கள் மற்றும் அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் குமரன், செந்தில்குமார், ஆகியோர் வழங்கினார்கள்.

ஆஞ்சநேயர் தரிசனம்

பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு திருக்கச்சிநம்பிகள் தெரு, ரங்கசாமிகுளம், விளக்கடிகோவில் தெருவிற்கு சென்றார். அங்கு, காஞ்சீபுரம் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் ஏற்பாட்டின் பேரில் அவர் அமைத்திருந்த பிரமாண்டமான கல்வெட்டு, கொடிகம்பத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து கொடியேற்றினார்.

பிறகு அங்கிருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, காந்திரோடு தேரடிக்கு சென்றார். அங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று ஆஞ்சநேயரை பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். அவருக்கு கோவில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. பிறகு, கோவிலில் இருந்து காந்திரோடு, மூங்கில்மண்டபம், மேட்டுத்தெரு, காவலான் கேட் வழியாக கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக பின்புறத்தில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பல்நோக்கு கூட்டரங்கை திறந்து வைத்தார். பிறகு புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி 6,250 பயனாளிகளுக்கு ரூ.32 கோடியே 26 லட்சத்து 44 ஆயிரத்து 799 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கலெக்டர் அலுவலகம் வளாகம் வந்த தமிழக முதல்-அமைச்சரை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி நூர்முகமது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி வை.ஜெய்குமார் உள்பட அதிகாரிகள் வரவேற்றனர்.

மேலும் செய்திகள்