இலுப்பூரில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

இலுப்பூரில் உள்ள கர்ப்பிணிகளுக்கு கலெக்டர் கணேஷ் தலைமையில் சமுதாய வளைகாப்பு நடைபெற்றது.

Update: 2018-09-14 22:08 GMT
அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை மற்றும் இலுப்பூரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் இலுப்பூரில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் கணேஷ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி தமிழக முதல்-அமைச்சர் செயல் படுத்தி வருகிறார். கர்ப்பிணிகள் நல்ல உடல்நலத்துடன் இருக்கவும், சுகாதாரம் பேணவும், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விராலிமலையில் 200 கர்ப்பிணிகளுக்கும், இலுப்பூரில் 250 கர்ப்பிணிகளுக்கும் சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் மொத்தம் 3,440 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட உள்ளது.

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் கர்ப்பிணிகளுக்கு, தமிழக அரசு சார்பில் மஞ்சள், குங்குமம், வளையல், வாழைப்பழம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் ஆரோக்கியம் சார்ந்த கையேடும் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து கர்ப்பிணிகளுக்கும் மதிய உணவாக சத்துமிக்க பல்வகை கலவை சாதமும் வழங்கப்படுகிறது. மேலும் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு கர்ப்பிணிகளுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் தாய், சேய் நலம் பாதுகாக்கப்படுகிறது.

தமிழக அரசு கர்ப்பிணிகளின் நலனை பாதுகாக்கும் வகையில், அரசு மருத்துவ மனைகளில் குழந்தைகளுக்கு 16 வகையான பொருட்கள் அடங்கிய அம்மா குழந்தைகள் நலப் பரிசு பெட்டகம் வழங்குவதுடன் கர்ப்பிணிகளுக்கு ரூ.18 ஆயிரம் மகப்பேறு உதவித்தொகையும் வழங்கி வருகிறது. எனவே கர்ப்பிணிகள் தமிழக அரசின் இத்தகைய நலத்திட்ட உதவிகளை உரிய முறையில் பெற்று சுகாதாரமான வாழ்வு வாழ வேண்டும். கர்ப்பிணிகள் மருத்துவர்கள் வழங்கும் அறிவுரைகளை தவறாது கடை பிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட சமூக நல அதிகாரி ரேணுகா, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் புஷ்பகலா, இலுப்பூர் கூட்டுறவு சங்க தலைவர்கள் சின்னதம்பி, ராமசாமி, அட்மா குழு தலைவர்கள் பழனியாண்டி, சாம்பசிவம், முன்னாள் ஒன்றிய குழுத்தலைவர் சுப்பையா, பயனாளிகள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்