சேந்தமங்கலம் அருகே ரூ.2.11 கோடி மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்

சேந்தமங்கலம் அருகே ரூ.2 கோடியே 11 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டபணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2018-09-14 22:45 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொண்டமநாய்க்கன்பட்டி, அக்கியம்பட்டி, பொம்மசமுத்திரம், வாழவந்திகோம்பை, பெரியகுளம் ஆகிய ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் ரூ.2 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன்படி சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொண்டமநாய்க்கன்பட்டி ஊராட்சி, வடுகப்பட்டி போயர் தெருவில் சுரங்கம் மற்றும் கனிமங்கள் திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்தார். அதேபோல் அங்குள்ள பொதுகிணறு மற்றும் பெரமாவூரில் திரவக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளின் வீடுகளில் ரூ.70 ஆயிரம் மதிப்பீட்டில் உறிஞ்சு குழிகள் அமைக்கும் பணிகளை அப்போது அவர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அங்கு ரூ.1 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பீட்டில் சுப்பிரமணி என்பவரின் விவசாய நிலத்தில் பண்ணைக்குட்டை அமைக்கப்பட்டு வரும் பணியினையும், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தலா ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 4 வீடுகளையும் கலெக்டர் ஆய்வு செய்தார்.

அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தில் மல்லிகா என்பவர் ரூ.2 லட்சத்து 10ஆயிரம் மதிப்பீட்டில் கட்டி வரும் வீட்டையும், அக்கியம்பட்டியில் ரமேஷ் என்பவரின் வீட்டையும் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார். பின்னர் பொம்மசமுத்திரத்தில் ராமநாதபுரம்புதூர் மாரியம்மன் கோவில் அருகில் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்படும் பணியினையும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் பொம்மசமுத்்திரம் போயர் தெருவில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு வரும் பணியினையும் அவர் ஆய்வு செய்தார்.

அதன் பிறகு வாழவந்திகோம்பையில் பிரதம மந்திரியின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1¾ கோடி மதிப்பீட்டில் 6 கி.மீ நீளத்திற்கு சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதையும், பெரியகுளம் ஊராட்சி, பட்டத்தையான்குட்டை பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு உள்ள மண்புழு உரம் தயாரிக்கும் கூடத்தினையும், ரூ.1.11 லட்சம் மதிப்பீட்டில் கசிவுநீர் குட்டை அமைக்கப்பட்டு வரும் பணியினையும் கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் மாலதி, சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்்கள் பத்மநாபன், சேகர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்