கோவையில் கைதான ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த இஸ்மாயிலை திண்டிவனம் அழைத்து வந்து விசாரணை
கோவையில் கைதான ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த இஸ்மாயிலை போலீசார் காவலில் எடுத்து திண்டிவனம் அழைத்து வந்து அவரது வீட்டில் விசாரணை நடத்தினர். மற்ற 4 பேரிடம் கோவையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திண்டிவனம்,
கோவையில் இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்யும் சதித்திட்டத்துடன் சிலர் சென்னையில் இருந்து கோவைக்கு ரெயிலில் வருவதாக கோவை மாநகர போலீஸ் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சென்னையில் இருந்து கோவைக்கு வந்த ரெயிலில் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அந்த ரெயிலில் பயணம் செய்த விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த இஸ்மாயில் (வயது 25), சென்னை ஓட்டேரியை சேர்ந்த சலாவுதீன் (25), வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி (29), பல்லாவரம் சம்சுதீன் (20) ஆகிய 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களை அழைத்துச்செல்வதற்காக வந்திருந்த கோவை என்.எச்.ரோடு திருமால் வீதியை சேர்ந்த ஆசிக் (25) என்பவரும் பிடிபட்டார். அவர்களுக்கு உதவி செய்ததாக கோவை உக்கடத்தை சேர்ந்த ஆட்டோ பைசல், குனியமுத்தூரை சேர்ந்த அன்வர் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 7 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டம்(உபா) உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பிடிபட்ட 5 பேரிடமும் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கோவையில் வசித்து வரும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன்சம்பத் உள்ளிட்ட இந்து இயக்க பிரமுகர்களை கொலை செய்யும் சதித்திட்டத்துடன் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். கைதானவர்களில் திண்டிவனத்தை சேர்ந்த இஸ்மாயில், ஐ.எஸ். என்ற பயங்கரவாத அமைப்பில் ரகசிய உறுப்பினராக இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் முதலில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் அனுமதி கேட்டு கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதன்பேரில் 5 பேரையும் வருகிற 17-ந் தேதி வரை 5 நாட்கள் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து இஸ்மாயிலை மட்டும் கோவை மாநகர சட்டம்-ஒழுங்கு போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் போலீசார் இஸ்மாயிலை பலத்த பாதுகாப்புடன் நேற்று திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிபாபு, சப்-இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் ஆகியோருடன், திண்டிவனம் கசாமியான் தெருவில் உள்ள இஸ்மாயிலின் வீட்டுக்கு காலை 11 மணிக்கு சென்றனர்.
அப்போது அங்கிருந்த இஸ்மாயிலின் தந்தை சுல்தான் இப்ராகீம்(50), சகோதரர்கள் ஜாகீர்உசேன்(28), இஸ்மாயில்(25), சதாம்உசேன்(24) ஆகியோரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அவரது உறவினர்களிடமும் இஸ்மாயில் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணை சுமார் 15 நிமிடம் நீடித்தது. விசாரணை முடிந்ததும் திண்டிவனம் கிராம நிர்வாக அலுவலர் உமா சங்கர் முன்னிலையில் இஸ்மாயில் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து இஸ்மாயில் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் போலீசார் கோவைக்கு புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட 5 பேரில் இஸ்மாயிலை மட்டும் போலீசார் திண்டிவனத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். மற்ற 4 பேர்களான சலாவுதீன், ஜாபர் சாதிக் அலி, சம்சுதீன், ஆசிக் ஆகிய 4 பேரையும் போலீசார் கோவையில் வைத்து விசாரித்தனர். வெவ்வேறு இடங்களை சேர்ந்த இவர்களுக்குள் தொடர்பு ஏற்பட்டது எப்படி? தடை செய்யப்பட்ட ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தகவல்களை அவர்களுக்குள் பரிமாறிக் கொண்டது ஏன்? என்னென்ன தகவல்களை அவர்கள் பரிமாறிக் கொண்டனர்? அதன் நோக்கம் என்ன? இவர்களின் பின்னணியில் வேறு யாராவது உள்ளார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களில் சலாவுதீன், ஜாபர் சாதிக் அலி, சம்சுதீன் ஆகிய 3 பேரும் சென்னையில் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள். எனவே அவர்கள் 3 பேரையும் இன்று(வெள்ளிக்கிழமை) சென்னைக்கு கோவை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை நடத்த உள்ளனர்.