6 பேர் பலியான வழக்கில் விபத்தை ஏற்படுத்திய டிரைவருக்கு 6 ஆண்டு சிறை

உளுந்தூர்பேட்டை அருகே 6 பேர் பலியான வழக்கில் விபத்தை ஏற்படுத்திய டிரைவருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Update: 2018-09-11 21:30 GMT

உளுந்தூர்பேட்டை, 

சென்னை பெருங்களத்தூரை சேர்ந்தவர் சுந்தரம்(வயது 54). இவரது மகன் நரேஷ். இவர்கள் 13.11.2016 அன்று தனது உறவினர்களுடன் தஞ்சாவூர் மாவட்டம் கருப்பூர் பகுதிக்கு ஒரு காரில் புறப்பட்டார். பின்னர் அங்கிருந்து அதே காரில் சுந்தரம் குடும்பத்தினர் சென்னை நோக்கி புறப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் குறுக்கு சாலையில் வந்தபோது, எலவனாசூர்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி வந்த லாரி ஒன்று குறுக்கே புகுந்தது. இதில் லாரியின் நடுப்பகுதியில் கார் மோதியது.

இந்த கோர விபத்தில் சுந்தரம், அவருடைய சகோதரி சுசீலா(58), வீராசாமி மனைவி பத்மா(45), பாப்பா(70), ராமச்சந்திரன்(35), இருளையா மகன் ஆகாஷ்(9) ஆகிய 6 பேரும் உடல் நசுங்கி பலியானார்கள்.

இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் எடைக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பான வழக்கு உளுந்தூர்பேட்டை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் வக்கீல் கிருஷ்ணன் ஆஜராகி வாதாடினார். வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி தனசேகரன், விபத்தை ஏற்படுத்திய வேலூர் மாவட்டம் இடையான்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் தாமோதரனுக்கு (26) 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் செய்திகள்