ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் துப்பாக்கிகளுடன் கைது

சிறைத்துறை, போலீஸ் பெண் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த பெரிய குளம் ரவுடி ‘புல்லட்’ நாகராஜனை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து துப்பாக்கிகள், கத்திகள், போலி அடையாள அட்டைகள், ரூ.10 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2018-09-10 21:45 GMT
பெரியகுளம்,


தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலத்தை சேர்ந்தவர் நாகராஜன் என்ற ‘புல்லட்‘ நாகராஜன். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர் போலீசாரின் ரவுடிகள் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவுக்கு மிரட்டல் விடுத்து ‘வாட்ஸ்-அப்’பில் ஆடியோ வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அவர் பெரியகுளம் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் கொலை மிரட்டல் விடுத்து ஆடியோ வெளியிட்டார். மேலும், தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவை விமர்சித்தும், மாவட்ட போலீசாரை விமர்சித்தும் மற்றொரு ஆடியோவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

‘புல்லட்‘ நாகராஜனின் அண்ணன், ஒரு கொலை வழக்கில் மதுரை மத்திய சிறையில் இருந்தார். அவரை பரிசோதனை செய்ய வந்த பெண் டாக்டருடன் தகராறு செய்தது தொடர்பாக ‘புல்லட்‘ நாகராஜனின் அண்ணன் மீது சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளா நடவடிக்கை எடுத்தார். இதை அறிந்து ஆத்திரம் அடைந்த ‘புல்லட்‘ நாகராஜன் மிரட்டல் ஆடியோ வெளியிட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பான புகாரின்பேரில் மதுரை கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ‘புல்லட்‘ நாகராஜனை தேடி வந்தனர்.

தென்கரையில் வழக்கு

இதற்கிடையே தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலா கொடுத்த புகாரின்பேரில், தென்கரை போலீஸ் நிலையத்திலும் ‘புல்லட்‘ நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவரை தென்கரை போலீசாரும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ‘புல்லட்‘ நாகராஜன் நேற்று பெரியகுளம் மூன்றாந்தல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக அனைத்துக் கட்சிகள் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்து கொண்டு இருந்தது. அங்கு பணியில் இருந்த தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு காசிராஜன் மற்றும் போலீசார் சிலர், மோட்டார் சைக்கிளில் ‘புல்லட்‘ நாகராஜன் செல்வதை பார்த்துள்ளனர்.

இதனையடுத்து போலீஸ் ஏட்டு காசிராஜன், தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு அவரை துரத்திச் சென்றார். சிறிது தூரத்தில் ‘புல்லட்‘ நாகராஜனை அவர் மடக்கினார். அப்போது ‘புல்லட்‘ நாகராஜன் தனது இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை எடுப்பதற்குள் காசிராஜன் மடக்கிப் பிடித்துக் கொண்டார்.

இதற்கிடையே அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுருளிராஜாவும் தனது ஜீப்பில் அங்கு வந்து விட்டார். உடனே ‘புல்லட்‘ நாகராஜனை போலீசார் பிடித்து ஜீப்பில் ஏற்றி தென்கரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவர் வைத்திருந்த ஒரு பையையும் போலீசார் கைப்பற்றினர்.

போலீஸ் நிலையத்துக்கு சென்றதும் ‘புல்லட்‘ நாகராஜன் இடுப்பில் சொருகி வைத்து இருந்த 2 கத்திகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் அவருடைய பையை சோதனை நடத்திய போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதற்குள் 2 கைத்துப்பாக்கிகள், போலி அடையாள அட்டைகள், ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, நீதிபதி அணியும் ஆடை, வக்கீல் ஆடை, ரப்பர் ஸ்டாம்ப், விசிட்டிங் கார்டு, ரூ.2000, ரூ.500, ரூ.200, ரூ.100 என ரூ.10 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகள் ஆகியவை இருந்தன.

நீதிபதி அணிவது போன்ற ஆடையில் சப்-ஜட்ஜ் (சார்பு நீதிபதி) என்ற வாசகத்துடன் கூடிய அட்டையும் பொருத்தப்பட்டு இருந்தது. துப்பாக்கிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அவை இரண்டும் ‘டம்மி’ துப்பாக்கிகள் என்பது தெரியவந்தது. அவற்றையும் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்த ரவுடி ‘புல்லட்’ நாகராஜன் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரியகுளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்