மாயனூரில் மீன்பிடித்தொழில் தொடங்கியது

காவிரியில் நீர்வரத்து குறைந்ததால் மாய னூரில் மீன்பிடித்தொழில் தொடங்கியது.

Update: 2018-09-09 00:05 GMT
கிருஷ்ணராயபுரம்,

கரூர் மாவட்டம் மாயனூர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்கள் காவிரி ஆற்றில் மீன் பிடித்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வரு கிறார்கள்.

இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதங்களில் தொடர்ந்து பெய்த கன மழையால் மேட்டூர் அணை நிரம்பி அதிகப்படியான நீர் காவிரியில் தொடர்ந்து திறந்துவிடப்பட்டது. இதனால் கடந்த 2 மாதமாக வெள்ள அபாய எச்சரிக்கை மாவட்ட நிர்வாகத்தால் அவ்வப்போது விடுக்கப்பட்டதால் மீனவர்கள் ஆற்றில் இறங்கி மீன்பிடிக்க முடியாத நிலையில் கஷ்டப்பட்டு வந்தனர்.

மாற்று தொழில் எதுவும் தெரியாத நிலையில் திருச்சி மீன் மார்க்கெட் சென்று மீன்களை வாங்கி வந்து இந்த பகுதியில் வைத்து விற்பனை செய்தபோது குறைந்த அளவே வருமானம் கிடைத்தது. மேலும் ஆற்று மீனை வாங்க வரும் பலரும் இந்த வெளிமார்க்கெட் மீனை விரும்பி வாங்கவில்லை.

இதனால் ஆற்றில் தண்ணீர் எப்போது குறையும் என எதிர்பார்த்து காத்திருந்த மீனவர்களுக்கு கடந்த வாரத்திலிருந்து படிபடியாக நீர்வரத்து குறைந்தது மகிழ்ச்சியை தந்தது.

இதனை அடுத்து மீனவர்கள் தற்போது ஆற்றிற்கு படகுகளில் சென்று வலை விரித்து மீன்களை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களின் வலையில் கெளுத்தி, சிலேபி, ரோகு, கொக்குமீன், விறால், ஆரா, விலாங்கு, வெளிச்சி என வகைவகையான மீன்கள் அதிக அளவில் கிடைக்கின்றன.

அவற்றை மாயனூர் தென்கரை வாய்க்கால் பகுதியில் அமர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக கிடைக்காமல் இருந்த ஆற்று மீன் கிடைப்பதை அறிந்து பல்வேறு பகுதியிலிருந்தும் இங்கு வந்து பலரும் மீன்களை வாங்கி செல்கின்றனர்.

ஒரு கிலோ ரூ.120-ல் இருந்து ரூ.180 வரை விற்கப்படுகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் அதிக அளவில் மீன்கள் விற்கப்படுகிறது.

மேலும் செய்திகள்