பெங்களூரு கூரியர் நிறுவன ஊழியர்கள் 4 பேர் உடல் நசுங்கி சாவு

தாவணகெரே அருகே, தறிகெட்டு ஓடிய கார் மீது லாரி மோதிய விபத்தில் பெங்களூரு கூரியர் நிறுவன ஊழியர்கள் 4 பேர் உடல் நசுங்கி செத்தனர்.

Update: 2018-09-08 22:19 GMT
சிக்கமகளூரு,

கோகாக்கிற்கு சுற்றுலா சென்றவர் களுக்கு இந்த சோகம் நேர்ந்து உள்ளது.

தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகா பெங்களூரு-உப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அரகனஹள்ளி பகுதியில் நேற்று காலை ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. மேலும் சாலை தடுப்பு சுவரில் மோதிய கார் சாலையின் மறுபக்கம் சென்றது.

இந்த சந்தர்ப்பத்தில் உப்பள்ளியில் இருந்து பெங்களூரு நோக்கி வந்த லாரி, தறிகெட்டு ஓடிய காரின் மீது மோதியது. இதில் கார் முற்றிலும் உருக்குலைந்தது. இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஹரிஹரா புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காரில் பயணம் செய்தவர்களை மீட்க முயன்றனர். அப்போது காரின் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் நசுங்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் 2 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்கள். அவர்கள் 2 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக ஹரிஹரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் விபத்தில் இறந்த 4 பேரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் பெங்களூரு சாம்ராஜ்பேட்டையை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் அப் பகுதியில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் ஊழியர்களாக பணியாற்றி வந்த வினய்(வயது 27), சித்தப்பா(28), அஜய்(32), கிரீஷ்(30) என்பதும், படுகாயம் அடைந்தவர்களில் ஒருவர் பெயர் கிரண் என்பது தெரிந்தது. மற்றொருவர் பெயர் தெரியவில்லை.

இவர்கள் அனைவரும் பெலகாவி மாவட்டம் கோகாக்கிற்கு சுற்றுலா சென்றதும், அப்போது கார் விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து 4 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக ஹரிஹரா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்ற போது கார் விபத்தில் சிக்கி 4 பேர் பலியான சம்பவம் அரகனஹள்ளி பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்