திருச்சிற்றம்பலம் அருகே ஜெபக்கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபம் முற்றுகை, இந்து முன்னணியினர் 22 பேர் கைது

திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் ஜெபக்கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்து முன்னணியினர் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-09-07 23:15 GMT

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று கிறிஸ்தவ அமைப்பு சார்பில் ஜெபக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்துக்களை மதமாற்றம் செய்யப்படுவதாக கூறி, விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் முருகையன் தலைமையில் இந்து முன்னணியினர் மற்றும் பா.ஜ.க.வினர் திருமண மண்டபத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோ, தாசில்தார் ஜோதிவேல், ஆரோவில் இன்ஸ்பெக்டர் ஜோசப் செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்தனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பா.ஜ.க. மாவட்ட தலைவர் விநாயகம், ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், செயலாளர் சிவக்குமார், நிர்வாகிகள் மூர்த்தி, செல்வகணேசன், ரவிச்சந்திரன், குமார் உள்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்