சாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டம்
விருத்தாசலம் அருகே சேறும் சகதியுமான சாலையை சீரமைக்க கோரி நாற்று நட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் சி.கீரனூர்- பவளங்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை முற்றிலும் சேதமடைந்து மேடு பள்ளமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் இவ்வழியாக செல்ல பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து சேதமடைந்த சாலையை சீரமைக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும், இதுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவிலலை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழிலாளர்கள் அந்த சாலையோரம் உள்ள மணலை தோண்டி, மேடு பள்ளமாக இருந்த சாலையில் கொட்டி பள்ளத்தை மூடினர். பின்னர் மழை பெய்ததால் அந்த சாலை மீண்டும் சேதமடைந்தது.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் மணல் கொட்டப்பட்ட இடம்சேறும் சகதியுமாக காணப்பட்டது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவானது.
இந்த நிலையில் நேற்று காலை அந்த சாலை வழியாக வந்த ஒரு தனியார் பஸ்சும், லாரியும் சேற்றில் சிக்கி கொண்டன. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கிடையே பள்ளி, கல்லூரிக்கு புறப்பட்ட அந்த பகுதி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பஸ்சும், லாரியும் சேற்றில் சிக்கி போக்குவரத்து முற்றிலும் தடைபட்டிருப்பதை கண்டு ஆத்திரமடைந்தனர்.
பின்னர் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையை சீரமைக்க கோரி சேறும் சகதியுமான சாலையில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது பொதுமக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து பொதுமக்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் சி.கீரனூர்- பவளங்குடி செல்லும் சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
அதற்கு அதிகாரிகள், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்ட மாணவர்களும், பொதுமக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் சேற்றில் சிக்கிய பஸ்சும், லாரியும் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.