செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி தம்பதி சாவு
செஞ்சி அருகே மின்சாரம் தாக்கி தம்பதி இறந்தனர்.
செஞ்சி,
செஞ்சி அருகே உள்ள மேல் ஒலக்கூரை சேர்ந்தவர் பெருமாள்(வயது 70). இவருடைய மனைவி முனியம்மாள்(60). பெருமாள், வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். தினமும் காலை மற்றும் மாலையில் வயதான தம்பதி 2 பேரும் அங்கு சென்று பால் கறந்து வருவது வழக்கம்.
அதன்படி நேற்று முன்தினம் மாலையில் பெருமாளும், முனியம்மாளும் பால் கறப்பதற்காக மாட்டு கொட்டகைக்கு சென்றனர். ஆனால் இரவு 10 மணி ஆகியும் அவர்கள், வீட்டுக்கு வரவில்லை.
இதனால் அவரது மகன் துரைமுருகன், விளைநிலத்துக்கு சென்று பார்த்தார். அப்போது, அங்குள்ள கொட்டகையில் பெருமாளும், முனியம்மாளும் இறந்து கிடந்தனர். பெருமாளின் கையில், மின்சாரம் தாக்கியதற்கான அறிகுறி இருந்தது.
எனவே கொட்டகையில் உள்ள மின்விளக்கு சுவிட்ச்சை பெருமாள் போட்டிருக்கலாம், அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கி இருக்கலாம். அவரை காப்பாற்ற சென்ற முனியம்மாளும் மின்சாரம் தாக்கி பலியாகி இருக்கலாம் என தெரிகிறது.
இது பற்றி தகவல் அறிந்ததும் செஞ்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று 2 பேரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி வயதான தம்பதி இறந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.