பாசனத்துக்கு முறையாக தண்ணீர் கொண்டு சேர்க்காத தமிழக அரசை கண்டித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

பாசனத்துக்கு முறையாக தண்ணீர் கொண்டு சேர்க்காத தமிழக அரசை கண்டித்து தஞ்சையில் பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-09-04 23:00 GMT
தஞ்சாவூர்,


பாட்டாளி மக்கள் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் ஆணைக்கிணங்க தஞ்சை மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம், ரெயில் நிலையம் அருகே நேற்று காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர் கோபிசந்தர், இளைஞரணி தலைவர் மாதவன், அமைப்பு செயலாளர் ராஜாராமன், மாவட்ட பொருளாளர் ரேணுகாகோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் குஞ்சிதபாதம் வரவேற்றார்.

ஆர்ப்பாட்டத்தில் கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் ஆறுகளிலும், குளங்களிலும், வாய்க்கால்களிலும் தண்ணீரை பாசனத்திற்கு முறையாக கொண்டு சேர்க்காத தமிழக அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன


பின்னர் ஜி.கே.மணி நிருபர்களிடம் கூறியதாவது:–

கர்நாடகம், கேரளாவில் பெய்த பலத்த மழை காரணமாக அதிகளவில் வெள்ளம் வந்து மேட்டூர் அணை நிரம்பியது. வெள்ளம் காரணமாக கரைபுரண்டு ஓடியும், தண்ணீர் கடைமடை பகுதிக்கு இன்னும் சென்றடையவில்லை. மேட்டூர் அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்கலாம். ஆனால் 170 டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் கலந்துள்ளது. தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் காவிரி பாசன வாய்க்கால்களில் தண்ணீர் சென்று சேரவில்லை. குளங்கள் வறண்டு கிடக்கின்றன.


மூன்று போகம் சாகுபடி செய்யப்பட்ட நெற்களஞ்சியம் தற்போது ஒருபோகம் கூட சாகுபடி செய்ய முடியாத நிலையில் உள்ளது. தமிழகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 960 மில்லி மீட்டர் மழை பெய்யும். சில ஆண்டுகளில் கடும் மழை, பல ஆண்டுகளில் வறட்சி ஏற்படும். வறட்சி காலத்தில் பாசனத்திற்கு தேவையான தண்ணீரை தேக்கி வைக்க தமிழக அரசு தவறிவிட்டது. நீர் மேலாண்மை செய்ய தவறிவிட்டது.

தண்ணீர் வீணாக கடலுக்கு செல்கிறது. கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்லாததற்கு தமிழக அரசு தான் காரணம். எனவே அரசு போர்க்கால அடிப்படையில் வாய்க்கால்களை தூர்வாரி, கடைமடை பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் சில மோசமான சதி செயல்களை செய்கிறது. டெல்டா பகுதியை தரிசு நிலமாக மாற்றி மீத்தேன், நியூட்ரினோ, ஷேல்எரிவாயு, பெட்ரோலிய மண்டலம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி டெல்டா மாவட்டத்தை சீரழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.


கர்நாடக மாநிலத்தில் நீர்பாசனத்தை முறையாக செயல்படுத்தி விளைநிலங்களின் பரப்பளவை அதிகரித்துள்ளனர். ஆனால் தமிழகத்தில் விளைநிலங்கள் பரப்பு குறைந்துள்ளது. இதற்கு அரசு அக்கறை இன்மைதான் காரணம். இதனால் உணவு உற்பத்தி எதிர்காலத்தில் குறைந்துவிடும். மத்திய அரசின் உத்தரவுக்கிணங்க தமிழகத்தில் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன தற்போது பெயரளவுக்கு கொள்முதல் நிலையங்களை அரசு திறந்துள்ளது. பல இடங்களில் நெல் மூட்டைகள் தேங்கி உள்ளது. எனவே அனைத்து நெல்லையும் உடனடியாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மகளிரணி செயலாளர் யோகலட்சுமி, நகர செயலாளர் அருண்பிரசாத், நகர இளைஞரணி செயலாளர் மனோகரன், நகர துணை செயலாளர் அருண்விக்டர், இளைஞரணி தலைவர் தண்டபாணி, பொருளாளர் ராஜாத்தியம்மாள் மற்றும் ஒன்றிய, மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் ஜி.கே.மணி கட்சி நிர்வாகிகளுடன் தஞ்சை மாவட்டம் நெய்வாசல் அருகே உள்ள குணமங்கலத்தில் வறண்டு கிடந்த 120 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியையும் பார்வையிட்டார். மேலும் அந்த பகுதியில் தூர்வாரப்படாத வாய்க்கால்கள், குளங்கள், சாகுபடி செய்யாமல் தரிசாக கிடக்கும் நிலங்கள் போன்றவற்றையும் பார்வையிட்டார். மேலும், அவர் கூறுகையில் ‘‘இந்த ஆண்டு மேட்டூர் அணை 4 முறை நிரம்பியும் டெல்டா பகுதியில் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. தண்ணீர் செல்வதற்கு பாசன வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படவில்லை. உடனடியாக வாய்க்கால்களை தூர்வாரி ஏரி, குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றார்.

மேலும் செய்திகள்