மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை வழங்க வேண்டும், மாநில மாநாட்டில் தீர்மானம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை வழங்க வேண்டும் என்று, மாற்றுத்திறனாளிகள் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;
திருப்பூர்,
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 3–வது மாநில மாநாடு கடந்த 2–ந் தேதி திருப்பூர் வாலிபாளையத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தொடங்கியது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாடு நேற்றுடன் நிறைவடைந்தது. நிறைவு நாளான நேற்று நடந்த மாநாட்டிற்கு சங்கத்தின் மாநில தலைவர் ஜான்சிராணி தலைமை தாங்கி பேசினார்.
மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் முன்னிலை வகித்தார். இதில் ஊனமுற்றோர் உரிமைக்கான தேசிய மேடையின் அகில இந்திய பொதுச்செயலாளர் முரளிதரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். இதில் தனியார் நிறுவனத்தினர் சிலர் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
* மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாகவும், கடும் ஊனமுற்றோருக்கான பராமரிப்பு உதவித்தொகையை ரூ.5 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும்.
* மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு கூட்டத்தினை முறைப்படுத்திட வேண்டும்.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை மற்றும் முழு ஊதியம் வழங்க வேண்டும்.
* ரெயில்வே துறையில் மாற்றுத்திறனாளிகள் நலன் சார்ந்த கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.
* தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டு ஊனமுற்றவர்களுக்கு அரசு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும்.
* பா.ஜனதா குறித்து முழக்கமிட்டதாக மாணவி சோபியா கைது செய்யப்பட்டதை கண்டிப்பது, அவர் மீதான வழக்கினை திரும்ப பெற்று, உடனே அவரை விடுதலை செய்ய வேண்டும்.
* மத்திய–மாநில அரசுகள் மாற்றுத்திறனாளி நலத்துறைக்கு ஒதுக்கும் நிதியினை 3 மடங்காக உயர்த்த வேண்டும்.
மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் சங்க திருப்பூர் மாவட்ட செயலாளர் ராஜேஷ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மாற்றுத்திறனாளிகளுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். வேலை வழங்காததை கண்டித்து அடுத்த மாதம் (அக்டோபர்) 9–ந் தேதி சென்னையில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடைபெறுகிறது. அரசு பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 75 சதவீதம் பயண கட்டணத்தில் சலுகை உள்ளது. ஆனால் இந்த அரசாணை அமல்படுத்தாமல் உள்ளது.
இதனை கண்டித்தும் வருகிற 25–ந் தேதி சென்னை பல்லவன் இல்லத்தில் போராட்டம் நடத்த உள்ளோம். சங்கத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் பகத்சிங் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். எனவே சட்டவிரோத நடவடிக்கை எடுத்த பழனி ஆர்.டி.ஓ. மீது நடவடிக்கை எடுக்க கோரி, திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை வருகிற 18–ந் தேதி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.