அம்மாபேட்டை அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீடு எரிந்து நாசம்

அம்மாபேட்டை அருகே கியாஸ் சிலிண்டர் வெடித்ததில் வீடு எரிந்து நாசம் ஆனது.

Update: 2018-09-04 22:00 GMT

அம்மாபேட்டை,

அம்மாபேட்டை அருகே குருவரெட்டியூர் சக்தி மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 51). இவருடைய மனைவி மேகலா (40). இவர்கள் 2 பேரும் வீட்டின் அருகே தள்ளுவண்டி கடை வைத்து நடத்தி வருகிறார்கள். நேற்று மாலை சரவணனும், மேகலாவும் உணவு சமைப்பதற்காக வீட்டில் கியாஸ் அடுப்பு மற்றும் விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தனர்.

அப்போது சிலிண்டரில் கியாஸ் தீர்ந்தது. இதனால் மற்றொரு சிலிண்டரில் கியாஸ் இணைப்பை மாற்றியபோது எதிர்பாராதவிதமாக சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டது. அப்போது விறகு அடுப்பில் தீ எரிந்ததால் கியாஸ் அடுப்பிலும் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த 2 வீட்டில் இருந்து வெளியே ஓடினார்கள். எனினும் அவர்கள் 2 பேருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் கியாஸ் சிலிண்டர் வெடித்தது.

இதனால் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்ததோடு தீ விபத்து நடந்த வீட்டுக்கு சென்றனர். பின்னர் வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதனால் அவர்கள் தீ விபத்து குறித்து அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை, தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். எனினும் வீடு மற்றும் அங்கு இருந்து பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசம் ஆனது.

இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்