ஈரோடு கனிமார்க்கெட்டில் ஜவுளிக்கடை அகற்றம், மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

ஈரோடு கனிமார்க்கெட்டில் உள்ள ஜவுளிக்கடையை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2018-09-04 22:15 GMT

ஈரோடு,

ஈரோடு நாடார்மேடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 47). இவர் ஈரோடு கனிமார்க்கெட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று காலை கனிமார்க்கெட் பகுதிக்கு திடீரென சென்றனர். பின்னர் சக்திவேலின் கடையில் உள்ள ஜவுளிகளை பறிமுதல் செய்து கடையை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–

கனிமார்க்கெட்டில் 1–வது நம்பர் கடை நீதிமோகன் பெயரில் உள்ளது. அவரிடம் சக்திவேல் வாடகைக்கு கடை வைத்து உள்ளார். அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக சக்திவேல் கடையை காலிசெய்ய மறுப்பதாக நீதிமோகன் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் கொடுத்தார். இதனால் ஜவுளிக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. 1–வது, 2–வது நம்பர் கடைகளை இணைத்து ஒரே கடையாக சக்திவேல் நடத்தி வருகிறார். எனவே 1–வது நம்பர் கடையில் வைக்கப்பட்டிருந்த ஜவுளிகள் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இதற்கிடையே எந்தவித முன்அறிவிப்பும் இல்லாமல் ஜவுளிகள் பறிமுதல் செய்யப்பட்டதால், சக்திவேல் மற்றும் கடை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி அங்கு ஈரோடு டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்