சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க வசதியாக அரசு பஸ் இயக்க நடவடிக்கை கலெக்டர் தகவல்

குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க வசதியாக அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்தார்.

Update: 2018-09-04 22:45 GMT
கன்னியாகுமரி,

குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் நிலையான மேம்பாடு குறித்த கருத்தரங்கம் கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பேசினார். கூடுதல் கலெக்டர் ராகுல்நாத் வரவேற்று பேசினார்.

தமிழக அரசின் முதன்மை செயலாளரும், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை ஆணையருமான ராமச்சந்திரன் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், உதவி கலெக்டர் ராஜகோபால் சுன்காரா, வருவாய் அதிகாரி ரேவதி, கலாசார மற்றும் புராதன வல்லுனர் சுவாமிநாதன், தூத்துக்குடி சாகச சுற்றுலா வல்லுனர் அர்ஜூன்மேத்தா உள்பட பலர் பேசினர்.

கூட்டத்தில், மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் கண்ணன், சுற்றுலா அதிகாரி நெல்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை தொடர்ந்து கலெக்டர் பிரசாந்த் வடநேரே நிருபர்களிடம் கூறியதாவது:–

குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது மற்றும் அடிப்படை வசதிகள் செய்வது குறித்து நிபுணர்கள் மூலம் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. லாட்ஜ் அதிபர்கள், சுற்றுலா வழிகாட்டிகளின் கருத்துகளும் கேட்கப்பட்டு அந்த கருத்துகளின் அடிப்படையில் சுற்றுலா திட்டங்கள் அமல்படுத்தப்படும்.

சுற்றுலா பயணிகளின் குறைபாடுகள், அவர்களுக்கு என்னென்ன அடிப்படை வசதிகள் செய்ய வேண்டும் என்பது போன்ற கருத்துகளை எந்த நேரத்திலும் சுற்றுலா மேம்பாட்டு குழுவிடம் தெரிவிக்கலாம்.

கன்னியாகுமரியில் ஆண்டு ஒன்றுக்கு 18 லட்சம் முதல் 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்துக்கு பாலம் அமைப்பது குறித்து அரசு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்து வருகிறது. விரைவில் அதற்கான அனுமதி கிடைக்கும்.

குமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றி பார்க்க வசதியாக அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்