மத்திய அரசின் தூய்மை விருது பெற்ற கூனிச்சம்பட்டு அரசு தொடக்க பள்ளிக்கு ரூ.1 லட்சம் நிதி

மத்திய அரசின் தூய்மை விருது பெற்ற கூனிச்சம்பட்டு அரசு தொடக்க பள்ளிக்கு ரூ.1லட்சம் நிதி உதவியை முதல்–அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.

Update: 2018-09-04 23:00 GMT

புதுச்சேரி,

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் குடிநீர், தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றை மையமாக வைத்து 2016–17ம் கல்வி ஆண்டு முதல் தேசிய, மாநில, மாவட்ட அளவில் தூய்மைப்பள்ளி விருது (ஸ்வச் வித்யாலயா) வழங்கி வருகிறது.

2017–18ஆம் கல்வியாண்டில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 727 பள்ளிகள், தேசிய விருதுக்காக போட்டியிட்டன. இதில் தேசிய அளவில் விருது பெற 52 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் அதிகபட்சமாக மொத்தம் 7 விருதுகளை புதுச்சேரி மாநிலம் பெற்றுள்ளது. இதில் புதுச்சேரி பிராந்தியத்தில் 5 பள்ளிகளும், காரைக்கால் பிராந்தியத்தில் 2 பள்ளிகள் இடம்பெற்றுள்ளன.

தேசிய அளவில் புதுச்சேரி கூனிச்சம்பட்டில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் அரசுத் தொடக்கப்பள்ளி 100 சதவீத புள்ளிகள் பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. இந்த பள்ளிக்கு வருகிற 18–ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மத்திரி பிரகாஷ் ஜவடேகர் விருது மற்றும் சுகாதாரம் பேணுவதற்காக மானியமாக ரூ.50 ஆயிரம் ரொக்கமும் வழங்கவுள்ளார்.

இந்த நிலையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று மதியம் கூனிச்சம்பட்டிற்கு நேரில் சென்று பாவேந்தர் பாரதிதாசன் அரசுத் தொடக்கப்பள்ளி வளாகத்தை பார்வையிட்டார். தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினார். சாதனை படைத்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சசிக்குமார் மற்றும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். பின்னர் முதல்–அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கி, பாராட்டி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

நமக்கு எல்லாம் பெருமை சேர்க்கும் நாளாக இது உள்ளது. இந்தியாவில் மூலையில் உள்ள ஒரு கிராமம் இன்று அகில இந்திய அளவில் புகழ்பெற்றிருக்கிறது என்றால் இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களின் சிறந்த பணியால் தான் இது கிடைத்துள்ளது. இதில் மாணவர்களின் பங்கும் உள்ளது. குறிப்பாக லட்சக்கணக்கான பள்ளிகள் இந்தியாவில் உள்ளன. இதில் 52 பள்ளிகளை மத்திய அரசு தூய்மையான, சிறப்பான பள்ளிகள் என தேர்வு செய்துள்ளது. அதில் 7 பள்ளிகள் புதுவை மாநிலத்தில் இருப்பது நமக்கு பெருமை.

புதுவையில் 5 பள்ளிகள், காரைக்காலில் 2 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று கூனிச்சம்பட்டு அரசு பள்ளி முதலிடம் பெற்றுள்ளது. இதனால் உங்களை கவுரவிக்க புதுச்சேரி மாநில அரசு முடிவு செய்தது. ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகளுக்கும், கிராம பொதுமக்களுக்கும், பள்ளி ஊழியர்களுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தங்களது கடமையை சரியாக செய்தால் அங்கீகாரம் பெற முடியும் என்பதை கூனிச்சம்பட்டு பள்ளி நிரூபித்து காட்டியுள்ளது. இந்த பள்ளி மற்ற பள்ளிகளுக்கு முன் உதாரணமாக உள்ளது. இந்த பள்ளிக்கு மத்திய அரசு ரூ.50 ஆயிரம் வழங்குகிறது. மத்திய அரசுக்கு நாங்கள் இளைத்தவர்கள் அல்ல என்று காட்டுவதற்காக முதல்–அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து பள்ளியின் வளர்ச்சிக்கு ரூ.1லட்சம் அளித்துள்ளோம். இன்னும் பல விருதுகளை இந்த பள்ளி பெற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார், கல்வித்துறை செயலாளர் அன்பரசு, இயக்குனர் குமார், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்தழகன், தெற்கு மாவட்ட தலைவர் சீனுவாசமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்