பொங்கலூரில் பி.ஏ.பி.அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

பொங்கலூரில் உள்ள பி.ஏ.பி அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-09-04 22:45 GMT

பொங்கலூர்,

பொங்கலூர் பகுதியில் பரம்பிக்குளம்–ஆழியாறு பாசனத்திட்டத்தின் கீழ் பாசனம் நடைபெற்று வருகிறது. கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகளுக்கு தற்போது திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தண்ணீர் திறந்து விடுவதற்கு முன்பாகவே வாய்க்கால்களை சுத்தம் செய்து தயார் நிலையில் காத்திருந்தனர். அதிகாரிகளும் முறைப்படி அனைத்து பகுதிகளுக்கும் தண்ணீர் திறந்து விடப்படும் என்றும், சோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்யுங்கள் என்று தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பொங்கலூர் மற்றும் காட்டூர் வாய்க்கால்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இந்த 2 வாய்க்கால்கள் மூலம் சுமார் ஆயிரத்து 100 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. 7 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிவித்திருந்த அதிகாரிகள் 3 நாட்களில் தண்ணீரை திடீரென நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் இதுகுறித்து அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது கடைமடைக்கு தண்ணீர் செல்லாததால் தண்ணீர் நிறுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர். எனவே நேற்று இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு பொங்கலூரில் உள்ள பி.ஏ.பி அலுவலகத்தை முற்றுகை யிட்டனர். காலை சுமார் 9 மணிக்கு வந்த விவசாயிகள் மதியம் வரை காத்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் அதுவரை வராததால் தொடர்ந்து அங்கேயே முற்றுகையிட்டு அமர்ந்திருந்தனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:–

ஏற்கனவே கடும் வறட்சியால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளோம். இந்த நிலையில் பி.ஏ.பி தண்ணீரை நம்பி சோளம் போன்ற பயிர்களை சாகுபடி செய்துள்ளோம். அதிகாரிகளும் எங்களிடத்தில் 7 நாட்களுக்கு தண்ணீர் நிச்சயம் திறந்துவிடுவோம் என்று உத்தரவாதம் அளித்தனர். ஆனால் மூன்றே நாட்களில் தண்ணீரை நிறுத்தி விட்டனர். இதனால் சாகுபடி செய்துள்ள பயிர்கள் கருகி வருகிறது. காலையில் இருந்து அலுவலகத்தில் காத்திருக்கிறோம். அதிகாரிகள் யாரும் வரவில்லை.

இவ்வாறு தெரிவித்தனர்.

சுமார் 12 மணியளவில் அலுவலகத்திற்கு வந்த பொங்கலூர் உதவி செயற்பொறியாளர் ஆனந்தன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இன்று இரவு(நேற்று) கண்டிப்பாக தண்ணீர் திறந்து விடப்படும் என்று உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து சமாதானம் அடைந்த விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்