பொள்ளாச்சி–திண்டுக்கல் 4 வழிச்சாலை பணிக்கு நில அளவீடு பணிகள் மேற்கொள்ள விவசாயிகள் எதிர்ப்பு
பொள்ளாச்சி–திண்டுக்கல் 4 வழிச்சாலை பணிக்கு நில அளவீடு பணிகள் மேற்கொள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி–திண்டுக்கல் இடையே நான்கு வழிச்சாலை அமைக்க ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு முதற்கட்ட நில அளவீடு பணிகள் முடிந்து விட்டது. மேலும் யார், யாரிடம் இருந்து எவ்வளவு இடம் கையகப்படுத்தப்படுகிறது என்பது குறித்த விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 4 வழிச்சாலையின் குறுக்கே வரும் சாலைகள், சந்திப்பு பகுதிகளில் பாலங்கள் மற்றும் இணைப்பு சாலைகள் அமைக்கப்படுகின்றது.
இதற்கு அந்த பகுதிகளில் மட்டும் கூடுதலாக இடம் தேவைப்படுகிறது. இதற்கான நில அளவீடு பணிகள் மேற்கொள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட ஆணைய அதிகாரிகள் மற்றும் நிலஅளவையர்கள் பொள்ளாச்சி அருகே புளியம்பட்டிக்கு வந்தனர். மேலும் அளந்து நடுவதற்கு டிராக்டரில் கற்கள் கொண்டு வரப்பட்டன. இதற்கிடையில் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் மீண்டும் நிலஅளவீடு செய்வதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நிலஎடுப்பு தாசில்தார் அலுவலக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விவசாயிகள் நிலஅளவீடு பணிகள் முடிந்து 15 நாட்களுக்குள் எவ்வளவு இழப்பீட்டு தொகை கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்படும். ஆனால் ஏற்கனவே நிலஅளவீடு பணிகள் மேற்கொண்டு 5 மாதங்கள் ஆகிறது. ஆனால் இழப்பீட்டு தொகை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் மீண்டும் நிலஅளவீடு பணிகள் நடைபெறுகிறது. கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு எவ்வளவு இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது என்பதை தெரிவித்தால் மட்டுமே நிலஅளவீடு பணிகள் மேற்கொள்ள அனுமதிப்போம் என்றனர். இதையடுத்து அதிகாரிகள் தற்காலிகமாக நிலஅளவை பணிகளை பாதியில் நிறுத்தி விட்டு சென்றனர். இதேபோன்று ஊஞ்சவேலாம்பட்டியிலும் நிலஅளவீடு பணிகள் நிறுத்தப்பட்டன.
இதுகுறித்து நில எடுப்பு அதிகாரிகள் கூறியதாவது:– பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட 12 கிராமங்களில் மட்டும் 87.853 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரியவந்து உள்ளது. தற்போது பாலங்கள், இணைப்பு சாலைகள் அமைக்க கூடுதல் இடம் தேவைப்படுகிறது. இதற்காக அந்த பகுதிகளில் மட்டும் நிலஅளவீடு பணிகள் நடைபெறுகிறது. விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக தற்போது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.
திண்டுக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலம் எடுப்பு) லதா இடமாறுதலாகி சென்று விட்டார். இதன் காரணமாக விவசாயிகளின் கோரிக்கையை உயர் அதிகாரிகளிடம் கொண்டு செல்ல முடியவில்லை. புதிதாக மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டால் மட்டுமே நில எடுப்பு பணிகள் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க முடியும். விவசாயிகளை அழைத்து பேசி பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்ட பிறகு நிலஅளவீடு பணிகள் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.