விநாயகர் சதுர்த்தியையொட்டி பந்தல்கள் அமைக்க 1,958 மண்டல்களுக்கு அனுமதி மாநகராட்சி வழங்கியது

விநாயகர் சதுர்த்தியையொட்டி பந்தல்கள் அமைக்க 1,958 மண்டல்களுக்கு மும்பை மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.

Update: 2018-09-04 00:32 GMT
மும்பை,

மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 13-ந்தேதி கோலாகலமாக தொடங்குகிறது. நகரம் முழுமையும் முக்கிய வீதிகளில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறும். ஆனந்த சதுர்த்தி வரை 11 நாட்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களை கட்டும். இதையொட்டி தற்போது, சிற்ப கலைக்கூடங்களில் தயாரான பிரமாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்காக மண்டல்களுக்கு எடுத்து செல்லப்பட்டு வருகின்றன.

விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வதற்கு பந்தல்களை அமைப்பதற்கு அனுமதிகேட்டு மும்பை மாநகராட்சியிடம் விநாயகர் மண்டல்கள் ஆன்-லைனில் விண்ணப்பித்து வருகின்றன.

இதுவரை 3 ஆயிரத்து 186 மண்டல்கள் பந்தல்கள் அமைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்து உள்ளன.

கட்டிடங்களில் இருந்து 10 அடிக்கு அப்பால் பந்தல்கள் அமைக்க வேண்டும், ரெயில்வே வழித்தடங்களையொட்டி பந்தல்கள் அமைக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை மும்பை மாநகராட்சி மண்டல்களுக்கு விதித்து உள்ளது.

இந்த விதிமுறைகளை பின்பற்றி பந்தல்களை அமைக்கும் மண்டல்களுக்கு மட்டுமே மாநகராட்சி அனுமதி வழங்குகிறது. அந்த அடிப்படையில் இதுவரை 1,958 மண்டல்களுக்கு மட்டுமே மாநகராட்சி அனுமதி வழங்கி உள்ளது.

இந்த விதிமுறைகளை பின்பற்றாத 258 மண்டல்களின் விண்ணப்பங்களை மாநகராட்சி நிராகரித்து உள்ளது. மற்ற விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

மாநகராட்சியிடம் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டு வரும் பந்தல்களை மாநகராட்சியினர் அகற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்