அரசு தொடக்கப்பள்ளிக்கு புதிதாக 2 ஆசிரியைகள் நியமனம்
பனப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளிக்கு புதிதாக 2 ஆசிரியைகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை மாணவ- மாணவிகள் பூங்கொத்து கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.
பனப்பாக்கம்,
பனப்பாக்கத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 1 முதல் 5-ம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வி மற்றும் ஆங்கில வழி கல்வி என தனித்தனியாக மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 126 மாணவர்கள், 149 மாணவிகள் என மொத்தம் 275 பேர் படித்து வருகின்றனர்.
இப்பள்ளியில் 10 ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் 4 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். 6 ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்து வந்தது. 4 ஆசிரியர்களால் 275 மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதனால் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்பட்டது. எனவே தொடக்கப்பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்று பெற்றோர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து கடந்த 30-ந்தேதி ‘தினத்தந்தி’யில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டது. இதனை பார்த்த நெமிலி வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜி வேறுபள்ளிகளில் பணியாற்றிய சுகன்யா, கவிதா ஆகிய 2 ஆசிரியைகளை பணி மாறுதல் செய்து பனப்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் பணியாற்ற உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து நேற்று (திங்கட்கிழமை) புதிய ஆசிரியைகள் சுகன்யா, கவிதா ஆகியோர் பனப்பாக்கம் தொடக்கப்பள்ளியில் பணியாற்ற பள்ளிக்கு வந்தனர். தங்கள் பள்ளிக்கு பாடம் நடத்த புதிதாக 2 ஆசிரியைகள் வருவதை அறிந்த மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பள்ளி தலைமை ஆசிரியை அம்சவேணி தலைமையில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு பாடம் நடத்த வந்த 2 ஆசிரியைகளை பள்ளி நுழைவு வாயிலுக்கு சென்று ஆரத்தி எடுத்து கைகளை தட்டி பூங்கொத்து கொடுத்து மகிழ்ச்சியுடனும், ஆரவாரம் செய்தும் வரவேற்றனர். அப்போது பள்ளி மாணவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் சால்வை அணிவித்து வரவேற்று வாழ்த்து கூறினர்.
ஆசிரியர் பற்றாக்குறை குறித்து செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், உடனே நடவடிக்கை எடுத்த நெமிலி வட்டார கல்வி அலுவலர் ஜெயராஜிக்கும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தனர்.