உபரிநீரை சேமிக்க ஜெயமங்கலத்தில் துணை அணை கட்ட வேண்டும்

வைகை அணை நிரம்பி வெளியேறும் உபரிநீரை சேமிக்க ஜெயமங்கலத்தில் துணை அணை கட்ட வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 6 கிராம விவசாயிகள் மனு அளித்தனர்.

Update: 2018-09-03 22:00 GMT
தேனி,


தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அமைப்பினர் தரப்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன. இவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் குறித்து உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இக்கூட்டத்தில், ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள மணலார் தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்கள் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், ‘சுமார் 120 ஆண்டுகளுக்கு முன்பு பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாக்குமரி, தூத்துக்குடி, சங்கரன்கோவில், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் இருந்து எங்கள் முன்னோர்கள் இங்குள்ள தேயிலைத் தோட்டங்களுக்கு வேலைக்கு வந்தனர். பல தலைமுறையாக இங்கு குடியிருக்க சொந்த வீடோ, நிலமோ இல்லாமல் வசித்து வருகிறோம். தேயிலைத் தோட்ட தொழிலாளர்களான எங்களுக்கு அரசு நிர்ணயித்த கூலியை விட குறைவான கூலியே வழங்கப்படுகிறது. எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு பல ஆண்டுகளாக மனுக்கள் அளித்து வருகிறோம். சீப்பாலக்கோட்டையில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் எங்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த பணிகளும் பாதியில் நின்று விட்டது. எனவே சொந்த நிலமின்றி வாழும் எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

கடமலை-மயிலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலூத்து கிழக்கு தெருவை சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில், ‘எங்கள் பகுதியில் சுமார் 200 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறோம். இங்கு குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர். அதேபோல், ராசிங்காபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், தங்கள் பகுதிக்கு குடிநீர், சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.

இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ் தலைமையில் நிர்வாகிகள், முதல்-அமைச்சருக்கு அனுப்புவதற்காக மாவட்ட வருவாய் அலுவலரிடம் அளித்த மனுவில், ‘வருகிற 13-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய நாளில் இருந்து 5 நாட்கள் விழா எடுத்து சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும். ஊர்வலத்தில் பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்பார்கள். இந்த நாட்களில் காலாண்டு தேர்வு நடக்க இருப்பதாக தெரிகிறது. ஊர்வல நேரத்தில் தேர்வுகள் நடப்பதால் மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கும் என கருதுகிறோம். எனவே, தேர்வு தேதியை தள்ளி வைக்க வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று கூறியிருந்தனர்.

பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட ஜெயமங்கலம், நடுப்பட்டி, சிந்துவம்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, கோயில்புரம், குள்ளப்புரம் ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அளித்த மனுவில், ‘இந்த கிராமங்களில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. வைகை அணை தனது முழு கொள்ளளவை எட்டும் போது வைகை அணையின் பின்புறமாக உள்ள கன்னிமார் ஓடையின் வழியாக உபரிநீர் வெளியேறி சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும். இந்த ஓடையை சிலர் ஆக்கிரமித்து தண்ணீர் வெளியேறாதவாறு மண் மற்றும் கற்களை போட்டு தடுத்துள்ளனர். பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்திலும் விவசாயம் செய்து வருகின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி ஓடையை தூர்வார வேண்டும். ஜெயமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் வைகை அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை சேமிக்க ஜெயமங்கலத்தில் துணை அணை கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதன்படி, 2010-ம் ஆண்டு மண் பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இங்கு துணை அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர். 

மேலும் செய்திகள்