மாமனார் அடித்துக்கொலை ஊர்க்காவல்படை வீரர் கைது

கூடங்குளம் அருகே மாமனாரை கம்பால் அடித்துக் கொன்ற ஊர்க்காவல்படை வீரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-09-03 22:00 GMT
கூடங்குளம், 


நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள காடுதுலா கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 55). விவசாயி. இவருக்கு 2 மகள்கள். அதே பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் (32). ஊர்க்காவல்படை வீரர். இவர் பெருமாளின் மூத்த மகளான பரமசெல்வியை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இதில் இரு வீட்டாருக்கும் தகராறு ஏற்பட்டு பின்னர் சமரசம் அடைந்தனர். இந்த நிலையில் அந்தோணிராஜ் அடிக்கடி மதுகுடித்து விட்டு, பெருமாளின் வீட்டுக்கு சென்று அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவும், அந்தோணிராஜ் குடிபோதையில் பெருமாளிடம் தகராறில் ஈடுபட்டார்.

இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அந்தோணிராஜ், அருகில் கிடந்த கம்பை எடுத்து பெருமாளை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியவாறு அலறினார். அவரது சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் அந்தோணிராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அக்கம்பக்கத்தினர் பெருமாளை மீட்டு சிகிச்சைக்காக கூடங்குளத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கூடங்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அந்தோணிராஜை நேற்று பிடித்து கைது செய்தனர். 

மேலும் செய்திகள்